தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: பிறந்த நாள் ரகசியம்!

விசேஷம் இது வித்தியாசம்: பிறந்த நாள் ரகசியம்!

விசேஷம் இது வித்தியாசம்: பிறந்த நாள் ரகசியம்!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., 14 - ஆடிப்பூரம்

ஒன்பதாம் நுாற்றாண்டில், நள ஆண்டு, ஆடி மாதம், பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, வளர்பிறை சதுர்த்தசி திதி , செவ்வாய்க்கிழமை பிறந்தாள், ஆண்டாள். பூமாதேவியின் அம்சமான ஆண்டாள், இந்த நாளைத் தேர்ந்தெடுத்து பிறக்க காரணம் உண்டு.

திருமாலுக்கு ஸ்ரீதேவி, பூமாதேவி என, இரு மனைவியர். இவர்களில், ஸ்ரீதேவி, சீதாவாக பூமிக்கு வந்து, திருமாலின் அவதாரமான, ராமனுக்கு மனைவியானாள். இந்த அவதாரத்தில், அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். மீண்டும் ஒருமுறை, திருமால் அவளைப் பூமிக்கு தன்னுடன் அவதாரம் எடுக்க அழைத்த போது, அவள் வேண்டாம் என, மறுத்து விட்டாள்.

அந்த நேரத்தில், பூமாதேவி அவருடன் வர சம்மதித்தாள். பொறுமையின் சின்னமான பூமாதேவியே பூமிக்கு வருகிறாள் என்றால், அவள் நல்ல நாளை தேர்ந்தெடுக்க மாட்டாளா என்ன! அவள், யாருடைய கர்ப்பத்திலும் பிறக்கவில்லை. ஐந்து வயது குழந்தையாக, ஸ்ரீவில்லிபுத்துார் எனும் புண்ணிய தலத்தில் அவதாரம் செய்தாள். அங்குள்ள, வடபத்ரசாயி கோவிலில், பெரியாழ்வார் கைங்கர்யம் செய்து வந்தார். அவரை, தன் வளர்ப்பு தந்தையாகத் தேர்ந்தெடுத்தாள்.

பக்தியில், வைராக்கியம் என்று ஒரு வகை உண்டு. வைராக்கியம் இருந்தால், கடவுளின் திருப்பாதத்தை அடையலாம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த அவதாரம் நிகழ்ந்தது. 60 தமிழ் ஆண்டுகளில் செழுமையை முழுமையாக தருவது, நள ஆண்டு. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி, சுக்கிரன். இவர், காதல் நாயகர். பூமி பூஜை செய்ய உகந்த திதி, சதுர்த்தசி. சதுர்த்தசியன்று தான், தன் மகன் என்றும் பாராமல், நரகாசுரனை வதம் செய்ய, திருமாலுக்கு உதவினாள், பூமாதேவி. நீதியை நிலைநிறுத்த அவள் தேர்ந்தெடுத்த நாள், இது. இதனால் தான், தீபாவளிக்கு முந்தைய தினத்தை, நரக சதுர்த்தசி என்பர். அது மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், பூமிகாரகன் ஆவார்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தைரியசாலிகள். எதையும் நடத்தி முடிக்கும் வைராக்கியம் கொண்டவர்கள். அதனால் தான், அவள் பூமியில் பிறக்க இந்த நாளைத் தேர்ந்தெடுத்தாள். தன்னை கோகுலத்து கோபிகையாகவும், திருமாலைக் கண்ணனாகவும் கருதி காதலித்தாள்.

'பூமியில் பிறந்த ஒருத்தியால், கடவுளைத் திருமணம் செய்ய முடியுமா என்ன? இது பைத்தியக்காரத்தனம்...' என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதைப் பொருட்படுத்தாமல், திருமாலைக் கரம் பிடித்தாள். தான் மட்டுமின்றி, தன் தோழிகளையும், பாவை விரதம் அனுஷ்டிக்க செய்தாள்.

நாம் செய்யும் தவறுகளை, திருமாலிடம் மறைக்கும், ஆண்டாள், நாம் சிறு நன்மை செய்தாலும் பெரிதுபடுத்தி சொல்லி, அவரது அருளுக்கு பாத்திரமாக்குவாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற கொள்கையுடைய அந்த திருநிறைச் செல்வியை, அவளது பிறந்தநாளில் போற்றி வணங்குவோம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us