PUBLISHED ON : மே 17, 2026

மே 17 - இஷ்டி காலம்
பஞ்சாங்கம் அல்லது தினசரி காலண்டர்களில் நீங்கள், 'இஷ்டி' என்ற வார்த்தையைப் பார்த்திருக்கலாம். 'இஷ்டி' என்றால், வழிபாட்டு நேரம் என, பொருள். கடவுளை எந்த நேரமும் வழிபடலாம் என்றாலும், அவருக்கு பூஜை செய்வதற்கென குறிப்பிட்ட ஒரு நாளை தேர்ந்தெடுத்து செய்தால், சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஏனென்றால், 'இஷ்டி' காலத்தில், எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ அந்த தெய்வமும், அதனுடன் தேவர்களும் நம் அருகில் வந்து அமர்ந்து பூஜையை ஏற்றுக்கொள்வதாக, ஐதீகம்.
'இஷ்டி' நேரம் மாதத்தில், இரண்டு முறை வரும். அமாவாசை அல்லது பவுர்ணமி முடிந்து, பிரதமை திதி துவங்கும் நேரம், 'இஷ்டி' காலம் ஆகும். அமாவாசை அல்லது பவுர்ணமியின் இறுதிப்பகுதி மற்றும் பிரதமையின் முதல் மூன்று நாழிகை-, அதாவது, 72 நிமிடம், 'இஷ்டி' காலமாக இருக்கும்.
அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை பிரதமை நேரத்தில், தீர்க்காயுள் மற்றும் செல்வ விருத்திக்காக, பிரம்மா மற்றும் குபேரனை வழிபடுவர். பவுர்ணமி முடிந்து துவங்கும் தேய்பிறை பிரதமை காலத்தில், பாதுகாப்பு மற்றும் தட்டுப்பாடற்ற உணவு கிடைக்க, துர்க்கை மற்றும் அக்னி தேவனை வழிபடுவர். துர்காதேவி பாதுகாப்பை அருள்வாள். அக்னி பகவானின் துணை இருந்தால் தான் சுவையான உணவு வகைகளை சமைக்கலாம். அதுமட்டுமின்றி, மனதில் தோன்றும் தீய எண்ணங்களை பக்தி என்னும் நெருப்பு கொண்டு எரிக்க உதவுவார்.
அக்னி தேவன் இருந்தால் தான் யாகங்களை தடையின்றி நடத்த முடியும். யாக குண்டத்தில் எரியும் அக்னியில் இடப்படும் பொருட்கள் தேவர்களை சென்றடையும். நம் இஷ்ட தெய்வங்களையும் இந்த நேரத்தில் வணங்கலாம்.
'இஷ்டி' காலத்தில், தொழில் அபிவிருத்தி அடைய, பணி உயர்வு கிடைக்க, நீண்ட நாட்களாக தடைபட்டு கிடக்கும் காரியங்கள் வெற்றி பெற ஹோமங்கள் நடத்தலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் ஹோமத்திற்கு, சக்தியும், பலனும் அதிகம்.
பாம்பன் சுவாமிகள், 'குமார ஸ்தவம்!' என்ற ஸ்தோத்திரத்தை எழுதியுள்ளார். முருகப் பெருமானை வணங்குவதற்குரிய ஸ்லோகங்களை உள்ளடக்கியது இது.
இதில், 'ஓம் இஷ்டி பதயே நமோ நம' என்பது ஒரு வரி. 'வேள்விகளின் தலைவனை வணங்குகிறேன்...' என்பது இதன் பொருள். இதில் இருந்து, 'இஷ்டி' என்றால், வேள்வி அல்லது யாகம் என்று அர்த்தம் என்பதை அறியலாம். முருகப்பெருமான் அக்னியில் தோன்றியவர். இதனால், அக்னியைப் பயன்படுத்தி செய்யும் எல்லா பூஜைகளுக்கும், முருகனே தலைவன் என்றாகிறது.
இந்த ஆண்டில், மே 17, ஜூன் 1, 16, ஜூலை 1, 15, ஆகஸ்ட் 13, 26, செப்., 12, 27, அக்., 11, 26, நவ., 10, 24, டிச., 10, 24 தேதிகளில், 'இஷ்டி' காலம் வருகிறது. தெய்வங்கள் நம் அருகில் வரும் இந்த, 'இஷ்டி' நாட்களில், நம் இஷ்ட தெய்வங்களை பூஜித்து அருள் பெறுவோம்.
தி.செல்லப்பா
