விசேஷம் இது வித்தியாசம்: தங்க வீடு தந்த தமிழ் மூதாட்டி!
விசேஷம் இது வித்தியாசம்: தங்க வீடு தந்த தமிழ் மூதாட்டி!
PUBLISHED ON : ஏப் 19, 2026

ஏப்., 20 -அட்சய திரிதியை
தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லிக்கனியை, ஆதிசங்கரருக்கு, பசி தீர்க்க தானமளித்தாள், ஏழை மூதாட்டி ஒருவர். இப்படிப்பட்ட ஏழைகளிடம் பொருள் இருந்தால், தன்னைப் போன்ற சக ஏழைகளுக்கு கொடுத்து உதவுவர் என்பதால், லட்சுமி தாயாரை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழியச் செய்தார், சங்கரர். இந்த சம்பவம் நிகழ்ந்தது, ஒரு அட்சய திரிதியை நாளன்று தான்.
இதன் அடிப்படையில், கேரளத்திலுள்ள காலடி கிருஷ்ணன் கோவிலில், அட்சய திரிதியை அன்று, லட்சுமி தாயாருக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்கின்றனர்.
கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இதே போன்று பொன் மழை பொழிந்திருக்கிறது, ஒரு ஏழைச்சிறுமியின் வீட்டில் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது பற்றி அறிந்து கொள்வோமா?
ஒருநாள், இரவு, 8:00 மணி. தமிழ் மூதாட்டி அவ்வை, ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். பசி வாட்டியது. நடக்கவும் சிரமமாக இருந்தது. வழியில் ஒரு குடிசை தென்பட்டது. அந்த வீட்டுக்கதவைத் தட்டினார், அவ்வையார்.
கதவைத் திறந்து வெளியே வந்தாள், ஒரு சிறுமி. மூதாட்டி ஒருவர் வாசலில் நிற்பதைப் பார்த்தாள்.
'ஐயோ பாவம்! யாரோ ஒரு மூதாட்டி இரவில் இங்கு வந்து சிக்கிக்கொண்டாள் போலும்!' என்று நினைத்து, 'உள்ளே வாங்க பாட்டி, ஏன் வெளியில் நிற்கிறீர்கள்?' என, மூதாட்டியை அன்புடன் வரவேற்றாள், அச்சிறுமி. பாட்டியின் முகத்தைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. அவர் சாப்பிடவில்லை என்பது! வீட்டிலோ ஏதுமில்லை. அப்போது தான் முந்தைய நாள் மிஞ்சிய கஞ்சியை சாப்பிட்டிருந்தாள், அச்சிறுமி.
அவளது மனம் கேட்கவில்லை. பாட்டியை அமரச் சொல்லி, தோட்டத்தில் இருந்த கீரையைப் பறித்து வந்தாள். வீட்டில் கொஞ்சம் நெய், கடுகு, மிளகாய், கருவேப்பிலை இருந்தது. அதைக் கொண்டு கீரையை வதக்கினாள்.
'பாட்டி! பசியுடன் வந்திருக்கிறீர்கள்! இந்த ஏழை வீட்டில் கஞ்சி காய்ச்ச அரிசி இல்லை. கீரை மட்டுமே வதக்கியுள்ளேன். இதையாவது சாப்பிடுங்கள்...' என்றாள். எளிமையானது என்றாலும், சுவையாக இருந்தது உணவு. அதன் சுவையில் மயங்கிய பாட்டி, அப்படியே பாட ஆரம்பித்தாள்.
'இந்தக் கீரை, அமுதத்தை விட சுவையாக இருக்கிறது. ஏழையாயினும் தானம் செய்யும் மனமுள்ள இவளது கைகளில் தங்கக் கடகம் விளங்கட்டும்...' என்ற பொருள்பட பாடினாள்.
என்ன ஆச்சரியம்! சிறுமியின் கைகளில் தங்கக்கடகம் வந்து விட்டது. கடகம் என்றால், வளையல் போன்ற ஆபரணம். அது மட்டுமா! அந்த வீடே மாளிகை போல் மாறி விட்டது. தங்கக்காசுகள் நிரம்பின; தானியங்கள் குவிந்தன.
தர்ம சிந்தனை உள்ளவர்களுக்கே பொருள் சேரும். அட்சய திரிதியைக்கு பொருட்களையும் வாங்குவோம்; தானமும் செய்து நற்பலன் அடைவோம்.
தி.செல்லப்பா
