
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். படிப்பு பி.சி.ஏ., திருமணம் ஆகிவிட்டது. ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார், கணவர்.
அம்மா, இல்லத்தரசி. எனக்கு ஒரே ஒரு மூத்த சகோதரர், மருத்துவராக இருக்கிறார். என் அப்பா, இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
அவர் இறப்புக்கு பின், எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தனர். ஆனால், நான் அதில் விருப்பமில்லாமல் இருந்தேன்.
அப்போது தான், கணவர் குடும்பத்தினர், என் அம்மாவிடம் என்னை பெண் கேட்டனர். அவர்கள், எங்கள் துாரத்து சொந்தம்.
கூட்டு குடும்பமாக, சித்தி - சித்தப்பா, சகோதரர்கள் என, ஒரே இடத்தில் தனித்தனி வீடுகளில் வசித்தனர். கூட்டு குடும்பத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் என எண்ணி, முதலில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், அதெல்லாம் சரியாகிவிடும் என, எப்படியோ என்னை சம்மதிக்க வைத்தனர்.
திருமணம் முடிந்து, ஆறு மாதங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்தது. என்னை மிகவும் அன்போடு பார்த்து கொள்வார், கணவர்.
ஆனால், பிரச்னை மாமியாரிடம் தான். நல்லவர் தான். எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்வார். மாமியாருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; மூட நம்பிக்கைகளும் அதிகம். இதனால், அவர் பின்பற்றும் சாஸ்திரங்கள் அதிகம். சிறு துரும்பிற்கு கூட, சாஸ்திரம் கண்டுபிடித்து என்னை குறை கூறுவார். ஆரம்பத்தில் நான் எதுவும் சொல்லவில்லை. பிறகு எரிச்சலாக வந்தது.
சமையலில் சின்ன தவறானால், 'இதெல்லாம் ஒரு குழம்பா?' என, என்னை கிண்டலடிப்பார்.
தன் பிள்ளைகளை வளர்த்ததை மிக பெருமையாக என்னிடம் சொல்வார். அது என் அம்மாவின் வளர்ப்பை மட்டம் தட்டுவது போல் இருக்கும்.
என் விருப்பு வெறுப்புகளை கூட கிண்டலடித்து பேசுவார். என்னால் தான் இந்த வீட்டில் செலவுகள் அதிகம் எனக் கூறி, சங்கடப்படுத்துவார்.
இதுபற்றி கணவரிடம் கேட்டால், 'என் அம்மா அப்படித்தான், அவர் என்னிடமே இப்படித்தான் நடந்து கொள்வார்...' என, சமாளிப்பார். ஆனாலும், அம்மாவுக்கு தான் பரிந்து பேசுவார், கணவர்.
அம்மா வீட்டிற்கு, மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தான் போக வேண்டும் என, நிபந்தனை போட்டார், மாமியார். இதுபற்றி, நான், கணவரிடம் கேட்க, அவரும் தன் அம்மா பக்கம் தான் நின்றார். சண்டை முத்தி போகவே, அம்மா வீட்டிற்கு வந்து சிறிது நாட்கள் இருந்தேன்.
அப்போது, அம்மாவிடம் என்னை பற்றி வீண் பழி சுமத்தியதோடு, என் வளர்ப்பை பற்றி பேசியும் அவமானப்படுத்தினார், மாமியார்.
'நான் உங்க பொண்ணுக்கு அவ்ளோ பார்த்து பார்த்து பண்றேன். அவளால் என் பிள்ளைக்கு நிறைய செலவு. என் பிள்ளையை போட்டு, 'டார்ச்சர்' செய்கிறாள், உங்க பொண்ணு. நாங்க கவுரவமா, மரியாதையா வாழ்றவங்க. உங்க பொண்ணு அதை கெடுத்துடுவா போல...' எனக் கூறியுள்ளார்.
எப்படியோ சமாதானம் செய்து, மாமியார் வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தனர்.
இப்போது, சில நாட்களில் வெளிநாடு செல்ல உள்ளதாக கூறினார், கணவர்.
'என்னையும் அழைத்து செல்லுங்கள்...' எனக் கேட்டேன்.
'உன்னை கூட்டிட்டு போனா, சில லட்சங்கள் செலவழித்து, விசா எடுக்க வேண்டும். அதுக்கு ஒரு ஆண்டாவது ஆகும். குடும்பமா போனா காசு சேர்த்து வைக்க முடியாது...' என்றார்.
'சரி, ஒரு ஆண்டு நான், அம்மா வீட்டில் இருந்தபடியே, வேலைக்கு செல்கிறேன்...' எனக் கூற, அதற்கு மறுத்தார்.
அவரது பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையை, என்னிடம் ஒப்படைத்து விட்டு, தான் மட்டும் வெளிநாடு செல்ல நினைக்கிறார். இதை நான் ஏற்க மறுத்தவுடன், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மாமியாருக்கும் தெரிய, அவரும் என்னை, கணவருடன் சேர்ந்து சாடினார்.
நானும் கோபத்தில் மாமியாரை எதிர்த்து கேட்டேன். என் அம்மாவிற்கு போன் செய்து, நான், மரியாதை தெரியாதவள், வளர்ப்பு சரியில்லை என, இரண்டு மணி நேரம் அம்மாவை சரமாரியாக குறை கூறியுள்ளார், கணவர்.
அதிலிருந்து என் அம்மா மன உளைச்சலுக்கு ஆளாக, நானும் தற்கொலை முடிவு எடுத்தேன். கணவர் பயந்து, 'இனி, இதுபோல் நடக்காது...' என, என்னிடம் கெஞ்சி, என் அம்மாவிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். பிறகு தான் என் அம்மா, சமாதானம் அடைந்தார்.
'இனி, என் அம்மாவிடம் இருந்து உனக்கு எந்த பிரச்னையும் வராது; நான் பார்த்துக் கொள்கிறேன்...' என, உறுதிமொழி அளித்ததோடு, 'திரும்பவும் இப்படி பிரச்னை வந்தால், தனிக்குடித்தனம் பற்றி யோசிக்கலாம்...' என்றார், கணவர்.
ஆனால், பிரச்னை வரும்போது திரும்பவும் கணவர், அம்மா பக்கம் சாய்ந்து என்னை கைவிட்டால் என்ன செய்வது? விவாகரத்து செய்தால், என் அம்மாவும் மன உளைச்சலுக்கு ஆளாவார்.
தக்க ஆலோசனை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
எல்லா வீடுகளிலும், மருமகள் - மாமியாருக்கு இடையே ஒரு கயிறு இழுக்கும் போட்டி நடக்கிறது. கயிற்றின் நடுவே கணவர், கட்டி போடப்பட்டு இருக்கிறார். கயிறு வேகமாய் இழுக்கும் பக்கம் வந்து விழுகிறார், கணவர். சில இடங்களில் தாயின் பாசத்தை, மனைவியின் தாம்பத்யம் தோற்கடிக்கிறது.
அதிகாரம் எப்போதுமே தானாக மடியில் வந்து விழாது; நாம் தான் ராஜதந்திரம் செய்து அதிகாரத்தை, தன் பக்கம் இழுக்க வேண்டும்.
தற்கொலை மிரட்டல், 'எமோஷனல் பிளாக்மெயில்!' எப்போதும் நமக்கு சாதகமாக செயல்படாது.
புகுந்த வீட்டில் செலவு கணக்கு பார்ப்பது, உனக்கு பிரச்னையாக இருக்கிறது அல்லவா?
உனக்கென தனியாக எந்த செலவை, உன் கணவரும், மாமியாரும் செய்கின்றனர் எனக் கேள்.
கணவரிடம் கீழ்க்கண்ட தெரிவுகளை கொடு...
* மாமியார் மீண்டும் உன் மனம் புண்படும்படி பேசினால், தனிக்குடித்தனம் போய் விட வேண்டும். இது, உள்ளூரில் வேலை பார்த்தால் செய்ய வேண்டியது
* கணவர், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால், உன்னையும் சேர்த்து அழைத்து செல்ல வேண்டும் அல்லது உன்னை வெளிநாட்டுக்கு பின்னர் அழைத்து செல்வதாக அவர் கூறினால், அம்மா வீட்டில் தங்கி நீ வேலைக்கு செல்ல, அவர் அனுமதிக்க வேண்டும்
* மாமியாரிடம் எப்போதும் மோதல் போக்கை மேற்கொள்ளாதே. உன்னை சிறிய அளவில் விமர்சனம் செய்தால், சிரித்துக் கொண்டே அவரிடமிருந்து விலகு.
கணவருடன் சேர்ந்து, ஓ.டி.டி.,யில் படம் பார். வாரம் ஒருமுறை ஜோடியாக கோவில் போ. மாதம் இருமுறை தியேட்டர் போ.
குழந்தை பெற்றுக்கொள். குழந்தை, கணவர் - மனைவி நெருக்கத்தை அதிகபடுத்தும்.
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.