PUBLISHED ON : அக் 24, 2026

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அரசு ஆரம்ப பள்ளியில், 1990ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த நடராஜன் கண்டிப்பு நிறைந்தவர். பாடம் நடத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார். ஒழுக்கத்தை பின்பற்ற கற்றுத் தந்து, பாசம் காட்டுவார். குறும்பு செய்வோரை வார்த்தையாலே வசியப்படுத்தி விடுவார்.
அன்று வகுப்பறையில் நண்பனின் புத்தகத்தை கிழித்து விட்டேன். அது பற்றி விசாரித்த வகுப்பாசிரியரிடம், 'அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை...' எனக் கூறினேன்.
கண்களை கூர்ந்து நோக்கி, 'தவறு செய் வது இயல்பு. அதை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் கடவுள், நாக்கில் சூடு போட்டு விடுவார்...' என்றார் ஆசிரியர்.
மறுநாள், வீட்டில் டீ குடித்தபோது வந்த என் தங்கை, கவன பிசகால் தட்டி விட்டாள். சூடான டீ வாயில் கொட்டி, நாக்கு வெந்தது. வாயையே திறக்க முடியாமல் தவித்தபோது, 'இனி எப்போதும் பொய் பேசக் கூடாது. தவறை ஒப்புக் கொண்டு, இரண்டு அடிகள் கூட வாங்கிக் கொள்ளலாம்' என, முடிவு செய்தேன்.
எனக்கு 42 வயதாகிறது. சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறேன். பொய் பேசுவதை தவிர்த்து என் பிள்ளைகளையும் அதுபோலவே வளர்த்து வருகிறேன்.
இதற்கு துாண்டுதலாக இருந்த, வகுப்பாசிரியர் நடராஜனை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- கே.ஷேக் அப்துல்லா, விழுப்புரம்.
தொடர்புக்கு: 93842 34019
