/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
கடவுளின் கொடை கணியான் கூத்து - முத்துபெருமாள் முத்தாய்ப்பு
/
கடவுளின் கொடை கணியான் கூத்து - முத்துபெருமாள் முத்தாய்ப்பு
கடவுளின் கொடை கணியான் கூத்து - முத்துபெருமாள் முத்தாய்ப்பு
கடவுளின் கொடை கணியான் கூத்து - முத்துபெருமாள் முத்தாய்ப்பு
PUBLISHED ON : ஜன 14, 2025

உலக நாடுகளிடமிருந்து இந்தியாவை வேறுபடுத்தி காட்டுவதே அதன் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தை கேட்கவே வேண்டாம். அந்தளவுக்கு தமிழகத்தில் தினமும் திருவிழாக்கள், பண்டிகைகள், கலைவிழாக்கள் என கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லை.
அந்தவகையில் கடவுள் சன்னதிகளில் மட்டுமே நடக்கும் கணியான் கூத்து தனித்துவம் மிக்கது. இயல் இசை நாடக கலைகளில் குறிப்பிட்ட இடத்தை வகிக்கும் கணியான் கூத்து பாட்டு, இசை, நடனம் என மண்ணின் மரபு சார்ந்ததாக திகழ்கிறது.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமிய கலை நிகழ்ச்சியை நாடு முழுதும் கொண்டு சேர்த்து வருகிறார் நாகர்கோவில் வல்லம்குமாரவிளையை சேர்ந்த முத்துபெருமாள் 54. கலைச்சுடர்மணி, கலைமணி, கலைமாமணி, சர்வதேச முத்தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். முத்துபெருமாளிடம் பேசியதிலிருந்து...
அப்பா வானமாமலை கணியான் கூத்து கலைஞர். அவரிடமிருந்துதான் இந்த கலையை கற்றுக் கொண்டேன். பழங்குடியின கணியான் சமூகத்தினரால் மட்டுமே இந்தகலை இன்றளவும் நடத்தப்படுவது தனிச்சிறப்பு. கரகாட்டம், நாடகம், தெருக்கூத்து, தோல்பாவை கூத்து போன்ற வரிசையில் இந்த கணியான் கூத்தும் சிறப்பானதாகும். கதையை எளிய பாடல் வழி வெளிப்படுத்தும் கதை பாடல் போல தான் கணியான் கூத்தும்.
தென்மாவட்டங்களில் முத்தாரம்மன், கருப்பசாமி, காளியம்மன் கோயில் உள்ளிட்ட கொடை விழாக்களில் இக்கிராம கலை நிகழ்ச்சி தவறாமல் நடக்கும். 7 பேர் கொண்ட குழுவினரால் நடத்தப்படும் இக்கலையில் இரு ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடனமாடுவர். மெயின் பாடகர் பாட, ஒருவர் பின்பாட்டு, மூவர் இசைக்கருவிகளை வாசிப்பர்.
என் குழுவில் நான் தான் மெயின் பாடகர். ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரமகாராஜா மயான காண்டம் என பல புராண கதைகளை பாட்டு, இசையாக நடனத்துடன் நடித்து காட்டுவோம். விடிய விடிய தொடர்ந்து 6 மணிநேரம் வரை நான் கூத்தை நடத்தியிருக்கிறேன். நடத்தியும் வருகிறேன்.
கோயில் திருவிழாக்களை தவிர திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் நடத்த மாட்டோம். ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகளின் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நடத்தி வருகிறோம்.
டில்லியில் நடந்த கிராமிய கலை நிகழ்ச்சியில் கணியான் கூத்தை நடத்திய போது பலத்த கைத்தட்டலை பெற்றது வாழ்க்கையில் மறக்க முடியாதது. என்னுடைய கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், 2020ற்கான சிறந்த கணியான் கூத்து கலைஞர் என அரசு கலைமாமணி விருது வழங்கியது.
கோயில் திருவிழாவில் கூட்டம் கலையாமல் நடுநிசியிலும் கண்விழித்து பார்த்து பாராட்டி மக்கள் கைகள் தட்டுவதை நேரடி பாராட்டாக கருதுகிறேன். இன்றைக்கு கணியான் சமூகத்தினர் பல துறைகளுக்கு வேலைக்கு சென்றாலும் கூட இந்த கலையையும் நடத்தி வருகின்றனர். என் மகன் சிவசுப்பிரமணியன் அரசு துறையில் பொறியாளராக உள்ளார்.
அவர் கூட நேரம் கிடைக்கும் போது கணியான் கூத்தில் எங்களுடன் இணைந்து கொள்வார். தென்மாவட்டங்களில் சில ஊர்களில் நடக்கும் கொடை விழாவில் நான் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நடத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பிறகும் கணியான் கூத்து காலம் கடந்து நிற்கும் என்றார்.
கூத்து காண 95850 53815.
- எம். ரமேஷ் பாபு