PUBLISHED ON : ஜன 14, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி மெயின் ரோட்டை கடந்து செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வாகனத்தை நிறுத்தி 'கட்டடம்' இல்லம் என்ற பெயரில் உள்ள பாரம்பரிய பங்களாவை வியப்புடன் பார்க்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வியப்பிற்கு காரணம் பாரம்பரிய பங்களாவின் சுவற்றில் அக்குடும்பத்தை சேர்ந்த மூதாதையர்களின் வாழ்வியல் முறைகளை வரைந்து வைத்துள்ளது தான்!
இந்த 80 ஆண்டு பழமையான பங்களாவை, குடும்பத்தினர் தங்களின் 'கனவு இல்லமாக' பராமரித்து வருகின்றனர். இது குறித்து 'கட்டடம்' இல்லத்தை சேர்ந்த என்.சுப்பையா 70, கூறியதாவது:
எங்களது மூதாதையர் ஆலமுத்துபிள்ளை 200 ஆண்டுக்கு முன் ராமநாத புரத்தில் இருந்து வணிக நோக்கத்திற்காக காரைக்குடி அருகே பாதரக்குடியில் குடியேறினார். அவரது வாரிசு வழி வந்தவர் தான் எங்களது தாத்தா சுப்பையா பிள்ளை. இவர் வியட்நாமில் வர்த்தகம் செய்து வந்தார். 1945ல் இந்த பங்களாவை கட்டி, அதற்கு 'கட்டடம்' என பெயரிட்டார். அதனை தொடர்ந்து என் தந்தை நாகரத்தினம், அவருக்கு பின் நாங்கள் பராமரித்து வருகிறோம். எங்களது மூதாதையர்களின் வாழ்வியல் முறைகளை வீட்டில் தத்ரூபமாக ஓவியமாக வரைந்தால் என்ன என்று தோன்றியது.
இதற்காக தம்பி மகன் சரத் செல்வநாதன், மூதாதையர்களின் வாழ்வியல் முறைகளை கதையாக தயாரித்தார். அவரது முயற்சியால் பெங்களூரு ஆர்டிஸ்ட் உரூன்தாஸ், பேராசிரியர் அமிதாப், அவரது மாணவர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தோம். அவர்களது முழு ஈடுபாட்டுடன் 'கட்டடம்' இல்ல சுவர்களில் மூதாதையர்களின் வாழ்வியல் முறைகள் ஓவியமானது.
தாத்தா வியட்நாமில் வணிகம் செய்ததால் அவரது நினைவாக வியட்நாம் படகு, அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில், பாதரக்குடியில் என் தந்தை செலவில் தெருவிளக்கு அமைத்து கொடுத்ததின் நினைவாக 'மின்டவர்' வரையப்பட்டது.
முகப்பில் பிரான்ஸ் முறைப்படி ஆர்ட் செய்துள்ளோம். தேவகோட்டை நகரத்தார்கள் பழநிக்கு காவடி ஏந்தி பாதயாத்திரை செல்லும் போது, எங்கள் இல்லத்தில் ஓய்வு எடுத்து செல்வார்கள். அதன் நினைவாக காவடி ஏந்தி செல்வது போன்றும் வரைந்துள்ளோம். இதற்காக ரூ.12 லட்சம் செலவானது.
இந்த வீட்டின் வரலாற்றை அறியும் வகையில் 'பார்கோட்' உருவாக்கியுள்ளோம். அலைபேசியில் இங்குள்ள பார்கோட்டை ரீட் செய்தால் 'கட்டடம்' பங்களாவின் வரலாற்றை பார்க்கலாம். சுற்றுலா பயணிகள் ஓவியத்தை பார்வையிட இலவசமாக அனுமதிக்கிறோம் என்றார்.
- என். வெங்கடேசன்