/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
அழகு தமிழில் அறிவியல் புத்தகங்கள்: 'சாதிக்கும் விண்வெளி மனிதன்' சசிகுமார்
/
அழகு தமிழில் அறிவியல் புத்தகங்கள்: 'சாதிக்கும் விண்வெளி மனிதன்' சசிகுமார்
அழகு தமிழில் அறிவியல் புத்தகங்கள்: 'சாதிக்கும் விண்வெளி மனிதன்' சசிகுமார்
அழகு தமிழில் அறிவியல் புத்தகங்கள்: 'சாதிக்கும் விண்வெளி மனிதன்' சசிகுமார்
PUBLISHED ON : அக் 30, 2024

நாம் பார்க்கும் பொருட்கள், பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஒரு அறிவியல் உண்டு. அதை ஆராய்ந்து பார்க்க நமக்கு தோன்றி இருக்குமா. இஸ்ரோ விஞ்ஞானியான முனைவர் சசிகுமாருக்கு தோன்றியிருக்கிறது. அதன் வெளிபாடுதான் தமிழ், ஆங்கிலம் என 33 புத்தகங்களில் எளிமையாக, ஜாலியாக, உரையாடலாக அறிவியல் அறிவை எழுத்தாளராக தந்து கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர். எம்.டெக் படித்த இவர் நாம் அன்றாட நிகழ்வுகளில் உள்ள அறிவியல் குறித்த நிகழ் தரவுகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இஸ்ரோவில் ராக்கெட்டிற்கான எடை குறைந்த செயற்கை நுாலிழை பொருட்கள் தயாரிக்கும் பிரிவில் விஞ்ஞானியாக உள்ளார். தினமலர் தீபாவளி மலருக்காக பேசுகிறார்...
''பல ஆண்டுகளாக நான் பள்ளிகளில் மாணவர்களிடம் பேசி வருகிறேன். ஆரம்பத்தில் மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில் தெரியாததால் அதை குறித்துக்கொண்டு பதில் தேடி குறிப்பெடுத்து வைப்பேன். இப்படி 800 கேள்விகள் விடை தெரியாமல் எனக்குள் இருந்தன. அதற்கெல்லாம் விடைதான் இந்த 33 நுால்கள்.
மாணவர்கள் கேட்பார்களே என்பதால், நான் பணியாற்றும் இஸ்ரோவின் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.,யில் ஆசியாவிலேயே பெரிய அறிவியல் நுாலகத்திற்கு சென்று விடைகளை தேடினேன். இந்நுாலகத்தில் விண்வெளிகளுக்கான 80 ஆயிரம் நுால்கள் நிரம்பி கிடக்கின்றன. 150 புத்தகங்களை படித்து குறிப்பெடுதேன்.
இதற்காகவே பணி நேரத்திற்கு முன்பு படிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கினேன். கொரோனா காலத்தில் குறிப்பு எடுத்ததை எழுத ஆரம்பித்தேன். அப்படி 2020ல் முதன்முதலாக எழுதியதுதான் விண்வெளி மனிதர்கள்' நுால். 2021ல் வெளிவந்தபோது தமிழக அரசு விருது பெற்றது. இதுவரை 9 ஆங்கில நுால்கள் உட்பட 33 நுால்களை எழுதி உள்ளேன். மலையாளம், கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தினமும் 2 பக்கங்களை எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் அறிவியல் உள்ளது; அதனால் நம்மை சுற்றியுள்ள அறிவியல் குறித்து எழுத ஆரம்பித்தேன். ஒரு கருப்பொருளை எடுத்து அதுதொடர்பான விபரங்களை நுால்கள், இணையதளங்களை தேடி படிப்பேன்.
அறிவியலை சுவாரஸ்யமாக படிக்கும் வகையில் உரையாடல் பாணியில் என் நுால்கள் இருக்கும். எழுதுவதோடு மாணவர்கள், மக்களிடம் அறிவியல் கருத்துகளை பேச்சு, உரையாடல் மூலம் கொண்டு சேர்க்கிறேன். நாம் இன்னும் அடிப்படை அறிவியலை கற்றுக்கொள்ளவில்லை; தமிழில் நிறைய அறிவியல் நுால்கள் வெளிவர வேண்டும்.
எழுதுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. நேரம் போதவில்லை. என் மனைவி ஜோதிமணி ஒத்துழைப்பால் தொடர்ந்து எழுத முடிகிறது. ஒரு நுால் எழுதியதும் 3 மாதங்களுக்கு தொட மாட்டேன். பிறகு அதில் குறைகளை சரிசெய்து, துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அனுப்புவேன். அவர்கள் சொல்லும் திருத்தங்களுடன் நுாலை வெளியிடுவேன்.
தற்போது ஹெலிகாப்டர், ரோபோ, அச்சு இயந்திரம் குறித்து எழுதி வருகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இன்று மாணவர்கள் இடையே மனப்பாடம் கல்வி முறை பரவலாக உள்ளது.
பாடப்புத்தகத்தோடு, அறிவியலை நாம் வெளியேயும் தேடி படிக்க வேண்டும். பாடத்தை வேறு கோணத்தில் படிப்பதன் மூலம் அறிவியல் திறன் அதிகரிக்கும். அதை பள்ளியில் இருந்தே துவங்க வேண்டும். அதற்காக பள்ளிகளுக்கு சென்று அறிவியல் 'பாடம்' சொல்லித் தருகிறேன்'' என்கிறார் சசிகுமார்.
-இவரை வாழ்த்த 98652 57071