/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பிரிந்து சென்றவருக்கு உதவிய பன்னீர்செல்வம்!
/
பிரிந்து சென்றவருக்கு உதவிய பன்னீர்செல்வம்!
PUBLISHED ON : ஆக 05, 2025 12:00 AM

''க ஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துங்கன்னு கேட்டிருக்காங்க பா...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள்ல ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கு... இங்க, நிறைய வெளி மாநில மாணவர்கள் படிக்கிறாங்க பா...
''இந்த கல்வி நிறுவனங்கள் பக்கத்துல கஞ்சா விற்பனை கனஜோரா நடக்கு... இதுல, சில மாணவர்களையும் கஞ்சா விற்பனை கும்பல், விற்பனையாளர்களா மாத்தி வச்சிருக்குது பா...
''இதெல்லாம், போலீசாருக்கு தெரியாம இருக்குமா... அதனால, 'எந்த கல்லுாரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகம் நடக்குதோ, அந்த ஏரியா போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணி, அதிரடி நடவடிக்கை எடுத்தா தான், மாணவர் சமுதாயத்தை காப்பாத்த முடியும்'னு, முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் மனுக்கள் அனுப்பியிருக்காங்க பா...' ' என்றார், அன்வர்பாய்.
''அரசு அலுவலக கம்ப்யூட்டர்லயே புகார் டைப் பண்ணி குடுத்திருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''அரியலுார் மாவட்ட நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குநர் அலுவலகத்துல, அஞ்சு வருஷத்துக்கு மேலா, ஒரே இடத்துல ஒரு பெண் பணியாளர் இருக்காங்க...
''ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஏஜன்டாகவே செயல்படும் இவங்க, 'லே அவுட் அப்ரூவல்'களுக்கு, லட்சக்கணக்குல லஞ்சம் வாங்கி, அதிகாரிகளுக்கு பாதி, தனக்கு பாதின்னு பிரிச்சுக்கிறாங்க...
''இவங்களது மாமூல் வாழ்க்கைக்கு ஒத்துழைக்காத அலுவலக உயர் அதிகாரியை, மாத்த பிளான் போட்டிருக்காங்க... இதுக்காக, ஆபீஸ் கம்ப்யூட்டர்லயே அதிகாரிக்கு எதிரா புகார் டைப் பண்ணி, ஒரு லெட்டர் பேடு பொறியாளர் சங்கத்தின் தலைவரது மொபைல் போனுக்கு அனுப்பியிருக்காங்க...
''அவரும் அதை, தன் லெட்டர் பேடுல பிரின்ட் அவுட் எடுத்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிட்டாரு...
''இது சம்பந்தமான விசாரணைக்கு சங்க தலைவரை அதிகாரிகள் அழைச்சப்ப, ஏதேதோ சொல்லி ஆஜராகாம, 'டிமிக்கி' குடுத்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யசோதா மேடம், நாளைக்கு பேசுதேன்...'' என, மொபைல் போன் இணைப்பை துண்டித்த படியே வந்த பெரிய சாமி அண்ணாச்சி, ''பிரிஞ்சு போனவருக்கு நிதியுதவி பண்ணியிருக்காரு வே...'' என்றார்.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், பன்னீர்செல்வம் அணியில் இருந்தவருமான மருது அழகுராஜ், சில மாசத்துக்கு முன்னாடி, பன்னீருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சு போயிட்டாருல்லா...
''இவர், 2021 சட்டசபை தேர்தல்ல சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் சட்டசபை தொகுதியில், அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைஞ்சுட்டாரு... அவர் கடன் வாங்கி தான் அந்த தேர்தலுக்கு செலவு செய்தாரு... அந்த கடனையே இன்னும் அடைக்க முடியாம தவிச்சிட்டு இருக்காரு வே...
''சமீபத்துல, அவருக்கு நெஞ்சு வலி வந்துட்டு... இதை கேள்விப்பட்ட பன்னீர்செல்வம் அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ரஞ்சித்குமார், போரூர்ல இருக்கிற தனியார் மருத்துவமனைக்கு அழகுராஜை அழைச்சிட்டு போய், 'அட்மிட்' பண்ணியிருக்காரு வே...
''விஷயத்தை கேள்விப்பட்ட பன்னீர் செல்வமும், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமியும், மருத்துவமனைக்கு போய் மருது அழகுராஜை பார்த்து நலம் விசாரிச்சிருக்காவ... சிகிச்சைக்கு கணிசமான நிதியுதவியும் செஞ்சிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.