/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு விருந்தினர் மாளிகையில் , ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
/
அரசு விருந்தினர் மாளிகையில் , ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
அரசு விருந்தினர் மாளிகையில் , ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
அரசு விருந்தினர் மாளிகையில் , ' ஓசி ' யில் தங்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஆக 04, 2025 12:00 AM

''தி ரைமறைவுல ஆதரவு தர்றாங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி, தி.மு.க.,விடமும், துணை தலைவர் பதவி, கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., கட்சியிடமும் இருக்கு...
''பக்கத்துல இருக்கிற திருப்பூர் மாநகராட்சியின் மேயரா, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், துணை மேயரா, இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்தவரும் இருக்காங்க...
''இந்த சூழல்ல, மாநகராட்சி பகுதியில் சேரும் குப்பையை கொட்ட இடமில்லாம, திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டுறதுக்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் செய்யுதுங்க...
''இதுக்கு, கட்சி பேதமில்லாம திருமுருகன் பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க... ஆனா, 'இதை பிரச்னையாக்க வேண்டாம்'னு ஆளுங்கட்சி மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்காம்...
''இதனால, நகராட்சியில, தி.மு.க.,வும், இந்திய கம்யூ.,வும் அமைதியாகிட்டாங்க... ஆனா, மற்றொரு கம்யூனிஸ்டுகளான மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள், மக்களை திரட்டி, போராட்டம் நடத்த தயாராகுறாங்க... அவங்களுக்கு, தி.மு.க., - இந்திய கம்யூ., கவுன்சிலர்கள் திரைமறைவுல ஆதரவு குடுத்துட்டு இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
''பர்மிஷன் கிடைக்கலன்னா, கோர்ட்டுக்கு போக போறாராம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருவே அந்த போராட்ட புலி...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்த கவின் என்ற தலித் இளைஞர் ஆணவ படுகொலை மாதிரி, இனி எந்த சம்பவமும் நடக்காம தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ், எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில், வர்ற, 6ம் தேதி சென்னையில உண்ணாவிரத போராட்டம் நடக்க இருக்கு ஓய்...
''இதுக்கு, ஈ.வெ.ரா., நினைவிடம், காமராஜர் இல்லம், கருணாநிதி நினைவிடம், காந்தி மண்டபம், அம்பேத்கர் மண்டபம் ஆகிய ஐந்து இடங்கள்ல, ஒரு இடத்துல அனுமதி கேட்டு மனு குடுத்திருக்காரு...
''போலீசார் அனுமதி தர மறுத்துட்டா, கோர்ட்ல முறையிட்டு அனுமதி வாங்க ரஞ்சன்குமார் முடிவு பண்ணியிருக்கார் ஓய்... '' என்றார், குப்பண்ணா.
''ஓசியில தங்கியிருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கடலுக்கு பேர் போன மாவட்டத்துல, கலெக்டரின் நேர்முக உதவியாளரா இருக்கிறவர், மாசம், 1.50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறாரு...
''வெளியூரைச் சேர்ந்த இவர், அங்க இருக்கிற பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில, ஒன்றரை வருஷமா, 'ஓசி'யில தங்கியிருக்காரு பா...
''சமீபத்துல முதல்வர் இங்க வந்தப்ப, எம்.பி., ஒருத்தருக்கு விருந்தினர் மாளிகையில அறை கேட்டப்ப, தான் தங்கியிருக்கும் அறையில ஜட்ஜ் ஒருத்தர் தங்கியிருக்கிறதா கணக்கு காட்டி, அறை குடுக்க மறுத்துட்டாரு...
''இந்த அதிகாரியிடம் பணத்தை வெட்டிட்டா, எந்த காரியமா இருந்தாலும் கச்சிதமா முடிச்சு குடுத்துடுவாரு... தனக்கு கீழே வேலை பார்க்கிற, வயசுல மூத்த அதிகாரிகளை கூட ஒருமையில தான் பேசுறாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்
''ரவி, இங்கன உட்காரும்...'' என, நண்பரிடம் கூறியபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.