/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' கமிஷன் கவர் கட் ' என மிரட்டும் நகராட்சி புள்ளி!
/
' கமிஷன் கவர் கட் ' என மிரட்டும் நகராட்சி புள்ளி!
' கமிஷன் கவர் கட் ' என மிரட்டும் நகராட்சி புள்ளி!
' கமிஷன் கவர் கட் ' என மிரட்டும் நகராட்சி புள்ளி!
PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM

பி ல்டர் காபியை பருகிய படியே, ''சட்டத் தை தப்பா பயன்படுத்தறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கு... இது பத்தி, நாம ஏற்கனவே பேசியிருக்கோம் ஓய்...
''இது சம்பந்தமா, சிறப்பு அதிகாரிகள் குழு ரெண்டு நாள் திருப்பூர்ல தணிக்கை நடத்தி, முறைகேடுகள் நடந்ததை உறுதிப்படுத்தினா... அப்புறமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமாரை ராணிப்பேட்டைக்கும், செயல்திறன் உதவி அலுவலரான சுப்பன் என்பவரை நீலகிரிக்கும் துாக்கி அடிச்சா ஓய்...
''இதுல ஒருத்தர், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை தப்பா பயன்படுத்தறார்... திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கற டீக்கடைக்காரருக்கும், இவருக்கும், 2,000 ரூபாய் பண தகராறு இருந்துது... உடனே, டீக்கடைக்காரர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்துல புகார் குடுத்துட்டார் ஓய்...
''அதோட, தன் புகார் மீது போலீசார் சரியா விசாரணை நடத்தலன்னு, அவங்களையும் கோர்த்து விட்டிருக்கார்... இப்ப வேற ஊருக்கு மாறி போயிட்டாலும், தன்னுடன் திருப்பூர்ல பணிபுரிந்த மற்றொரு அலுவலர் மீது, மத்திய, மாநில மனித உரிமை கமிஷன்ல புகார் குடுத்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''போலீஸ் ஸ்டேஷனை திறந்தா மட்டும் போதுமா வே...'' என கேட்ட பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில், புது போலீஸ் ஸ்டேஷனை கடந்த மார்ச் மாசம் திறந்தாவ... புது கட்டடம் கட்டாததால, ஒரு திருமண மண்டபத்துல வாடகைக்கு ஸ்டேஷன் இயங்குது வே...
''ஆனாலும், அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கல... அதே நேரம் திருமண மண்டபம் என்பதால, வணிக மின் கட்டணம் தான் வசூலிக்காவ வே...
''சமீபத்துல ஸ்டேஷனுக்கு, 7,000 ரூபாய் மின் கட்டணம் வந்திருக்கு... இதை கட்டுறதுக்கு லேட் ஆனதால, மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய ஊழியர் வந்துட்டாரு... அப்படி பண்ணிட்டா, வீண் சர்ச்சை வரும்னு நினைச்ச ஏட்டு ஒருத்தர், தன் சொந்த பணத்தை கட்டி, நிலைமையை சமாளிச்சிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''தீர்மானத்தை எதிர்த்தா, 'கவர் கட்'னு மிரட்டி வச்சிருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் முக்கிய பதவியில் இருக்காரு... இந்த முக்கிய புள்ளி, தனக்கு சாதகமான லாபம் தரக்கூடிய தீர்மானங்களை மன்ற கூட்டங்கள்ல வைக்கிறப்ப, கவுன்சிலர்கள் யாராவது எதிர்ப்பு தெரிவிச்சா, 'கமிஷன் கவர் கிடையாது'ன்னு சொல்லி வச்சிருக்காருங்க...
''இதனால, பல கவுன்சிலர்களும் வாயை மூடிட்டு இருந்துடுறாங்க... இதனால, மன்ற கூட்டம் மொத்தமே அஞ்சு நிமிஷம் தான் நடக்குது... பஸ் ஸ்டாண்டில் மாதம், 38,000 ரூபாய் வாடகை தந்த கடைக்கு, 8,500 ரூபாயா வாடகையை குறைச்சு குடுத்துட்டாருங்க...
''அதேபோல், தலா, 19,000 வாடகை வந்த இரு கடைகளுக்கு, 4,100 ரூபாயாகவும், 12,000 வாடகை வந்த கடைக்கு, 3,000 ரூபாயாகவும் வாடகையை குறைச்சுட்டாரு... இதுக்காக, முக்கிய புள்ளிக்கு லட்சக்கணக்குல கமிஷன் கைமாறியிருக்குதுங்க... அதே நேரம், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுதுங்க...'' என முடித்த அந்தோணிசாமி, ''மைக்கேல், நாளைக்கு பார்க்கலாம்...'' என, நண்பரிடம் விடைபெற்றபடியே எழுந்தார்.
மற்றவர்களும் நடையை கட்டினர்.