/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆசிரியர்களிடம் மிரட்டி வசூலிக்கும் பெண் அதிகாரி!
/
ஆசிரியர்களிடம் மிரட்டி வசூலிக்கும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, “மணப்பாறை தொகுதிக்கு இப்பவே போட்டி நடக்கு வே...” என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“விளக்கமா சொல்லுங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருச்சி மாவட்டத்தில், ஒன்பது சட்டசபை தொகுதிகள் இருக்கு... 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்கள்ல, எட்டு தொகுதியிலும் தி.மு.க.,வே போட்டியிட்டுச்சு வே...
“மணப்பாறை தொகுதியை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குச்சு... இப்ப, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா, கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் அப்துல் சமது இருக்காரு வே...
“வர்ற தேர்தல்ல, இந்த தொகுதியை கைப்பற்ற கூட்டணி கட்சிகள் போட்டி போடுது... மனித நேய மக்கள் கட்சிக்கு போட்டியா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்., - ம.தி.மு.க., - இந்திய கம்யூ., மற்றும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கட்சி நிர்வாகிகள், இப்பவே காய் நகர்த்திட்டு இருக்காவ வே...
“இதுக்கு இடையில, 'தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே தொகுதியை ஒதுக்குறதால, நம்ம கட்சியினர் சோர்ந்து போயிருக்காங்க... அதனால, இந்த முறை மணப்பாறையில நாமே போட்டியிடணும்'னு தி.மு.க.,வினரும் குரல் குடுத்துட்டு இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“கம்மியா டீசல் ஒதுக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில் ஆறு வனச்சரகங்கள் இருக்கு... தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகான்னு மூணு மாநில எல்லையில் இருக்கறதால, இந்த பகுதியில் யானை, சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமா இருக்கும் ஓய்...
“இதனால, 24 மணி நேரமும் வாகனங்கள்ல வனத்துறையினர் ரோந்து போறா... ஆனா, சமவெளி பகுதிகளை போல இந்த பகுதியிலும் ரோந்து வாகனத்துக்கு, மாசத்துக்கு, 70 லிட்டர் டீசல் மட்டுமே ஒதுக்கறா ஓய்...
“சராசரியா ஒரு வாகனத்துக்கு மாசத்துக்கு, 300- லிட்டர் டீசல் தேவை... வனத்துறையினர் தங்களது கைக்காசுல தான் டீசல் போட்டுக்கறா ஓய்...
“இதனால, இங்க வர்ற வனச்சரகர்கள் பலரும், வேற பகுதிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போறதுல தான் ஆர்வமா இருக்கா... கூடுதல் டீசல் ஒதுக்கீடு கேட்டு, துறையின் அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமே முறையிட்டும், பலன் இல்லாததால அதிகாரிகள் நொந்து போயிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“மிரட்டல் வசூல் நடத்துறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருவள்ளூர் மாவட்டத்தில், பிரபல முருகன் கோவில் ஊர்ல இருக்கிற பெண் கல்வி அதிகாரியை தான் சொல்றேன்... அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச பொருட்களை, பள்ளிகளுக்கு ஒரே நாள்ல அனுப்ப மாட்டேங்கிறாங்க...
“பள்ளி ஆசிரியர்களை ரெண்டு, மூணு முறையா வரவழைச்சு, குடுத்து அனுப்புறாங்க... இதனால, ஆசிரியர்கள் தனித்தனியா வாகன வாடகைக்கு செலவு பண்ண வேண்டியிருக்கு...
“சமீபத்துல, 'ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கு டி.டி.எஸ்., பைல் செய்யணும்'னு, அவங்களிடம் தலா, 150 முதல், 250 ரூபாய் வரைன்னு, 50,000 ரூபாய்க்கு மேல மிரட்டியே வசூல் பண்ணியிருக்காங்க...
“இது போக, ஜூலை மாசம் ஆடிட் செலவுக்குன்னு ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 300 ரூபாய் வீதம் வாங்கியிருக்காங்க... பணம் தராத ஆசிரியர்களை, ஏதாவது காரணம் காட்டி, 'ஆபீசுக்கு வந்துட்டு போங்க'ன்னு அடிக்கடி மிரட்டி அலைக்கழிக்கிறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.