/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மச்சான்கள் மூலம் மணல் கடத்தும் தனிப்பிரிவு அதிகாரி!
/
மச்சான்கள் மூலம் மணல் கடத்தும் தனிப்பிரிவு அதிகாரி!
மச்சான்கள் மூலம் மணல் கடத்தும் தனிப்பிரிவு அதிகாரி!
மச்சான்கள் மூலம் மணல் கடத்தும் தனிப்பிரிவு அதிகாரி!
PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் வி.ஆர்.பகவான் மறைவுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அஞ்சலி செலுத்த போகலன்னு பேசியிருந்தோமே... ஆனா, பொன்னேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், பகவான் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
உடனே, ''லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு நற்சான்றிதழ் தந்திருக் காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''விருதுநகர் மாவட்டத்தில், இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் நடந்த மண் திருட்டு சம்பந்தமா, தாசில்தார், ஆர்.ஐ., உள்ளிட்ட ஏழு பேரை, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க... ஆனா, மண் திருட்டை கண்டுக்காம இருந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கல பா...
''இந்த சூழல்ல, மண் திருட்டு கும்பல், 'யார் யாருக்கு எவ்வளவு மாமூல் குடுத்தோம்'னு ஒரு டைரியில் குறிச்சு வச்சிருந்த தகவல்கள் வெளியாச்சு... அதுல, எஸ்.ஐ., ஒருத்தர் பெயரும் இருந்துச்சு பா...
''சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவுல, இந்த எஸ்.ஐ.,க்கு சிறப்பா பணிபுரிந்ததற்கான நற் சான்றிதழை கலெக்டர் வழங்கினாரு... எஸ்.ஐ.,க்கு, மாவட்டத்தைச் சேர்ந்த மீசைக்கார முக்கிய புள்ளி மற்றும் உயர் போலீஸ் அதிகாரியின் ஆதரவு இருந்ததால தான், நற்சான்றிதழ் கிடைச்சிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஓவிரெட்டி, திருப் பதி போயிட்டு எப்ப வந்தீர்...'' என, நண்பரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''உள் வாடகைக்கு விட்டிருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்த கட்டடத்தை வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவையில் சித்தாபுதுார், செல்வபுரம் பகுதிகள்ல அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டியிருக்கா... சித்தாபுதுாரில் துாய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பில், 226 வீடுகள் இருக்கு ஓய்...
''இதுல பல வீடுகளை உள்வாடகைக்கு விட்டிருக்கா... இது அதிகாரிகளுக்கு தெரிஞ்சாலும், கட்சி சார்ந்த துாய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் தலையீடு இருக்கறதால, கண்டுக்காம இருக்கா ஓய்...
''அது மட்டுமில்ல... இந்த சங்க நிர்வாகிகள், புதுசா கட்டற குடியிருப்புகளில், தகுதி இல்லாதவாளுக்கு வீடுகளை ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு அழுத் தம் தரா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மச்சான்கள் மூலமா மணல் கடத்துதாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.பி., தனிப்பிரிவு அதிகாரியா இருந்தவர், 'மாமூல்' மழையில் குளிச்சிட்டு இருந்தாரு... இதனால, அவரை வேற ஸ்டேஷனுக்கு துாக்கி அடிச்சுட்டாவ வே...
''ஆனாலும் அசராத அதிகாரி, 'எஸ்.பி., எனக்கு ரொம்ப நெருக்கம்... சீக்கிரமே இங்க வந்துருவேன்... அதனால, எனக்கான மாமூலை நிறுத்தாம தந்துடுங்க'ன்னு கஞ்சா, லாட்டரி விற்ப னைன்னு சட்டவிரோத தொழில் பண்றவங்களை மிரட்டிட்டு இருக் காரு வே...
''அதுவும் இல்லாம, தன் சொந்த ஊரான அப்பாதுரை பகுதியில் கொள்ளிடம், அய்யன் வாய்க்காலில், தன் மச்சான்கள் மற்றும் உறவினர்கள் மூலமா மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு, மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''விஜயகுமார் வராரு... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர் களும் கிளம்பின ர்.