/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மலிவு விலை சிமென்ட் திட்டத்துக்கு மூடுவிழா?
/
மலிவு விலை சிமென்ட் திட்டத்துக்கு மூடுவிழா?
PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

நா ட்டு சர்க்கரை டீயை உறிஞ்சியபடியே, ''திருப்புவனம் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேங்காருல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நகை திருட்டு தொடர்பான விசாரணை யில், போலீசார் தாக்கியதில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் இறந்து போயிட்டாருல்லா... இது சம்பந்தமா, அஞ்சு போலீசார் கைதாகியிருக்காவ வே...
''இதனால, சிவகங்கை எஸ்.பி.,யா இருந்த, ஆஷிஷ் ராவத்தை மாத்திட்டு, ஜூலை 14ல், புதிய எஸ்.பி.,யா சிவபிரசாத் நியமிக்கப்பட்டாரு... அஜித்குமார் கொலை வழக்கை இப்ப சி.பி.ஐ., விசாரிக்கு வே...
''சி.பி.ஐ., அதிகாரிகள் தினமும் திருப்புவனம், மடப்புரம் வந்து விசாரணை நடத்திட்டு போறாவ... எஸ்.பி., என்ற முறையில் திருப்புவனம், மடப்புரத்துக்கு சிவபிரசாத் நேர்ல போயிருக்கணுமுல்லா...
''ஆனா, இதுவரைக்கும் அந்த பகுதிக்கே அவர் போகல... அதுவும் இல்லாம, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்துறப்ப, உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் வராததால, அவங்களுக்கு விளக்கம் அளிக்க முடியாம, திருப்புவனம் போலீசார் திணறுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அமைச்சரிடம் பேசவே முடியல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்காரு... இவரிடம் முக்கியமான தகவல் எதையும் தெரிவிக்க முடியாம அதிகாரி கள், தி.மு.க., நிர்வாகிகள் திணறுறாங்க பா...
''முதல் நாள் அமைச்சரிடம் பேசிய மொபைல் போன் நம்பர்ல மறுநாள் கூப்பிட்டா, 'ஸ்விட்ச் ஆப்' அல்லது, 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கார்'னு தகவல் வருது... எந்த விஷயமா இருந்தாலும், பி.ஏ.,க்கள் வழியா தான் அமைச்சருக்கு போகுது பா...
''அவங்களும், 'என்ன, எதுக்கு, ஏன்'னு ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டுட்டு, அதுல அவங்க திருப்தியானா மட்டும், கடைசியா ஒரு நம்பரை குடுத்து, 'இதுல கூப்பிடுங்க... அமைச்சர் பேசுவார்'னு சொல்றாங்க பா...
''ஆளுங்கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களால கூட, அமைச்சரிடம் சுலபமா பேச முடியல... இதனால, எல்லாரும் நொந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மலிவு விலை சிமென்ட் திட்டத்துக்கும் மூடுவிழா நடத்த போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தமிழகம் முழுக்க நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறும் வகையில், ஜெ., ஆட்சி காலத்தில், மலிவு விலையில், 'அம்மா சிமென்ட்' திட்டத்தை கொண்டு வந்தாங்க... இப்ப, அம்மா பெயரை எடுத்துட்டு, திட்டம் மட்டும் இருக்கு ஓய்...
''ஒன்றிய அலுவலகங்கள்ல, சில விதிகளுக்கு உட்பட்டு, இந்த சிமென்ட் விற்பனை நடந்துது... கடந்த மூணு மாசமா சிமென்ட் மூட்டைக்கு பணம் கட்டியவாளுக்கு இன்னும் வழங்கல ஓய்.. .
''அரசு தரப்பில் சிமென்ட் ஆலைகளுக்கு பாக்கி வச்சுட்டதால, அவா சிமென்ட் சப்ளையை நிறுத்திட்டதா சொல்றா... இதனால, பல ஊர்களிலும் ஒன்றிய அலுவலகங்களுக்கு மக்கள் நடையா நடக்கறா... 'இந்த திட்டத்துக்கும் மூடுவிழா பண்ணிட்டாளா'ன்னு புலம்பிண்டே போறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.