/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அ.தி.மு.க., வேட்பாளர் என கூறி வலம் வரும் டாக்டர்!
/
அ.தி.மு.க., வேட்பாளர் என கூறி வலம் வரும் டாக்டர்!
PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, “விதிகளை மீறி பணி மாறுதல் நடக்கறதா புலம்பறா ஓய்...” என, பேச்சை துவங்கினார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“தமிழகத்தில், மாநகராட்சி உதவி கமிஷனர் பதவிக்கு, வருவாய் துறையில் இருக்கிற துணை கலெக்டர்களை பணி மாறுதல் செய்யறா... இது, 2023ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகளுக்கு முரணானதாம் ஓய்...
“சமீபத்துல கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மதுரை ஆகிய ஐந்து மாநகராட்சிகளின் உதவி கமிஷனர்களா, துணை கலெக்டர்களை நியமிச்சிருக்கா... இப்படி பண்றதால, உள்ளாட்சி அமைப்புகள்ல பணிபுரியும் அதிகாரிகள் பதவி உயர்வு கிடைக்காம, 'அப்செட்'ல இருக்கா... 'இந்த பணி மாறுதல்ல பெருமளவு பணம் விளையாடறதோ'ன்னும் அவா சந்தேகப்படறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“பகிரங்கமா புகார் சொல்லிட்டாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“தி.மு.க.,வின் சேலம் மண்டல குழு நிர்வாகிகள் கூட்டம், சமீபத்துல ராணிப்பேட்டையில் நடந்துச்சு... மண்டல குழு தலைவரான அமைச்சர் வேலு தலைமையில் நடந்த கூட்டத்துல, 41 சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்னு, 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கிட்டாங்க...
“இதுல, சேலம் தி.மு.க., - எம்.பி., செல்வகணபதி பேசுறப்ப, 'எங்க மாவட்டத்தில், 141 பேர் ரேஷன் கடை பணியாளர்களா நியமிக்கப்பட்டிருக்காங்க... இதுல, அதிகமானோர், அ.தி.மு.க., - பா.ம.க.,வைச் சேர்ந்தவங்க தான்... நம்ம கட்சி நிர்வாகிகள் தந்த பட்டியல்ல பலருக்கு வேலை தரல... இது பத்தி அதிகாரிகளிடம் கேட்ட துக்கு, 'ஆளுங்கட்சி தலைமையில் இருந்து வந்த பட்டியல்படி தான் நியமிச்சோம்'னு சொல்றாங்க... இது எப்படி சாத்தியம்'னு ஆவேசமா கேட்டிருக்காருங்க...
“இதனால, கூட்டத்துல சலசலப்பாகிடுச்சு... அமைச்சர் வேலு, 'இது சம்பந்தமா விசாரணை நடத்தப்படும்'னு சொல்லி சமாதானப் படுத்தியிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“பிரசாரத்தையே துவங்கிட்டாரு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருச்சி, மணப்பாறை சட்டசபை தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான, மனிதநேய மக்கள் கட்சி வசம் இருக்கு... வர்ற சட்டசபை தேர்தல்ல, இந்த தொகுதியில அ.தி.மு.க., சார்பில், மணப்பாறையைச் சேர்ந்த பிரபல டாக்டர் விஜயகுமார் போட்டியிட விரும்புதாரு வே...
“சமீபத்துல தான் இவருக்கு, அ.தி.மு.க., மருத்துவ அணியில் மாநில துணை செயலர் பதவி குடுத்தாவ... பதவி வந்ததுமே, 'நான் தான் மணப்பாறை வேட்பாளர்'னு கட்சி நிர்வாகிகளிடம் அறிவிச்சிட்டு, தொகுதி முழுக்க வலம் வர்றாரு வே...
“சமீபத்துல மணப்பாறையில் நடந்த ரோட்டரி சங்க மீட்டிங்கிலும், 'இவர் தான் மணப்பாறை தொகுதி வேட்பாளர்... இவரை எல்லாரும் ஆதரிக்கணும்'னு பேசியிருக்காவ வே.
..
“இதை பார்த்து, இந்த தொகுதியில் இருக்கிற அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியில இருக்காவ... 'தலைமை முறைப்படி அறிவிக்காம, இவரே வேட்பாளர்னு சொல்லிக்கிட்டா என்ன அர்த்தம்'னு, கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.