/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.5 லட்சம் 'அன்பளிப்பில்' தப்பிய சில்மிஷ வாத்தியார்!
/
ரூ.5 லட்சம் 'அன்பளிப்பில்' தப்பிய சில்மிஷ வாத்தியார்!
ரூ.5 லட்சம் 'அன்பளிப்பில்' தப்பிய சில்மிஷ வாத்தியார்!
ரூ.5 லட்சம் 'அன்பளிப்பில்' தப்பிய சில்மிஷ வாத்தியார்!
PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''நேத்து என் டில்லி நண்பர் ஒருத்தர் பேசினாரு... அவர் சொன்ன தகவலை கேளுங்க வே...'' என, முன்னுரை தந்த பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அதாவது, துணை ஜனாதிபதி வேட்பாளரா, தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ., கூட்டணி சார்பில் அறிவிச்சாங்கல்லா... இதனால, 'இண்டியா' கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம்னு காங்கிரஸ் தலைவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்காவ வே...
''அப்ப, சி.பி.ஆருக்கு சரியான போட்டியா தமிழகத்தின் ப.சிதம்பரத்தை நிறுத்தலாம்னு காங்., முன்னாள் தலைவர் சோனியா யோசனை சொல்லியிருக்காங்க... ஆனா, இதை அவரது மகன் ராகுலும், நம்ம தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஏத்துக்கலையாம்... இந்த தகவலை கேள்விப்பட்டு சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும், தி.மு.க., மீது ரொம்பவே வருத்தத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
உடனே, ''போலீஸ் கமிஷனரை மாத்த துடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரா ராஜேந்திரன் இருக்கார்... இதுக்கு முன்னாடி கமிஷனரா இருந்த லட்சுமியும், கறாரான நேர்மையான அதிகாரியா இருந்ததால, 'கட்டிங்' போலீசார் ரொம்பவே தவிச்சு போயிட்டா ஓய்...
''இதனால, பலர் டிரான்ஸ்பர் வாங்கிண்டே போயிட்டா... இப்ப வந்திருக்கற ராஜேந்திரனும் தினமும் ஸ்டேஷன் விசிட், ஆலோசனை கூட்டம், வழக்குகள் குறித்த, 'அப்டேட்' கேட்டு, 'கிடுக்கிப்பிடி' போடறார்... இதனால, வேலை செய்யாம பெஞ்ச் தேய்ச்சுண்டு இருந்தவா, 'கல்லா' கட்டியவா எல்லாம் முழி பிதுங்கி போயிருக்கா ஓய்...
''இப்படி அடுத்தடுத்து கறார் ஆபீசர்களையே திருப்பூருக்கு போட்டா எப்படி... நாமும் நாலு காசு பார்க்க வேண்டாமான்னு நினைக்கற கீழ்மட்ட அதிகாரிகள் சிலர், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் வாயிலா, கமிஷனரை இடமாற்றம் செய்ய காய் நகர்த்திண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சில்மிஷ வாத்தியாரை தப்பிக்க விட்டுட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''முதல்வர் ஸ்டாலினின் சென்னை கொளத்துார் தொகுதியில் இருக்கிற மாநகராட்சி பூங்காவுல, சமீபத்துல சிறுமியிடம் ஒருத்தர் சில்மிஷம் பண்ணிட்டு இருந்திருக்காரு... அங்க துாய்மைப் பணியாளரா இருந்த பெண் இதை பார்த்து, போலீசுக்கு தகவல் சொன்னாங்க...
''பெண் போலீசார் வந்து, ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிச்சாங்க... இதுல, அந்த நபர் அப்பகுதியில் இருக்கிற தனியார் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் என்பதும், சிறுமி, 14 வயசு மாணவின்னும் தெரியவந்துச்சுங்க...
''வாலிபால் பயிற்சி தந்த வாத்தியார், சிறுமியிடம் ஆசை வார்த்தை சொல்லி மிரட்டி கூட்டிட்டு வந்திருக்காரு... வசமா சிக்கிட்டதால, ரெண்டு பெண் போலீஸ் அதிகாரிகளிடம் வாத்தியார் கெஞ்சி பேரம் பேசியிருக்காருங்க...
''அவங்களும் மனசு இரங்கி, 5 லட்சம் ரூபாய்க்கு டீல் பேசி, வாத்தியாரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... சிறுமியின் பெற்றோரை கூப்பிட்டு, 'இதை வெளியில சொன்னா, உங்க பெண் வாழ்க்கை பாதிக்கப்படும்'னு அறிவுரை தந்து அனுப்பிட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அனைவரும் கிளம்ப, எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''வாங்கோ ஜான்சன்... கண்ணகி, பெமிலா கணக்கை பைசல் பண்ணிட்டேளா...'' என கேட்க, அவரும், 'ஆம்' என்பதாக தலையசைத்த படியே சென்றார்.