/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிக்கு எதிராக கைகோர்த்த , தி.மு.க. , - அ.தி.மு.க. , வினர்!
/
அதிகாரிக்கு எதிராக கைகோர்த்த , தி.மு.க. , - அ.தி.மு.க. , வினர்!
அதிகாரிக்கு எதிராக கைகோர்த்த , தி.மு.க. , - அ.தி.மு.க. , வினர்!
அதிகாரிக்கு எதிராக கைகோர்த்த , தி.மு.க. , - அ.தி.மு.க. , வினர்!
PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

நு ரை பொங்க வந்த, 'பில்டர்' காபியை வாங்கியபடியே, ''வசூலை வாரி குவிக்கறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பெரம்பலுார், சப் - ஜெயில்ல ஒரு சூப்பிரண்டு, இரண்டு ஜெயிலர், நான்கு போலீஸ்காரா இருக்கா... இங்க அடைக்கப்படும் கைதிகளை வாரத்துல ரெண்டு முறை, அவா குடும்பத்தினர் மூணு பேர் பார்க்கலாம்னு வெளியில எழுதி போட்டிருக்கா ஓய்...
''ஆனாலும், கைதிகளை பார்க்க வர்றவாகிட்ட தலைக்கு, 200 ரூபாய் கட்டாய வசூல் நடத்தறா... ஜாமின்ல வெளிய போற கைதிகள் கிட்ட, 1,000 துவங்கி, 2,000 ரூபாய் வரை வசூலிக்கறா... அதுவே, கொஞ்சம் வசதி யானவாளா இருந்தா, 'ஜெயிலுக்கு ஏதாவது பொருட்கள் வாங்கி தாங்கோ'ன்னு கூசாம கேட்டு வாங்கறா ஓய்...
''அதே நேரம், 'அடிப்படை வசதிகள் அறவே இல்லாத இந்த ஜெயில்ல, சுகாதார வசதிகளும் சுத்தமா இல்ல... சாப்பாடும் சரியில்ல'ன்னு கைதிகள் எல்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கசமுசா கதையை, 'கட்டிங்' வாங்கி அமுக்கிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து போலீஸ்ல இருந்த ஒரு, எஸ்.ஐ.,க்கும், பெண் போலீசுக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்துச்சுங்க... இடையில பிரச்னையாகி பிரிஞ்சுட்டாங்க...
''சமீபத்துல, ரெண்டு பேரும் நடுரோட்டுல சண்டை போட்டுக்கிட்டாங்க... இதனால, ரெண்டு பேரையும் அதிகாரிகள் வேற வேற இடங்களுக்கு அதிரடியா மாத்தினாங்க...
''ஆனாலும், பெண் போலீசுக்கு, எஸ்.ஐ., தொடர்ந்து, 'டார்ச்சர்' குடுத்திருக்காருங்க... எஸ்.பி., அலுவலகத்தில் அந்த பெண் போலீஸ், புகார் குடுத்திருக்காங்க...
''அங்க இருந்த தனிப்பிரிவு அதிகாரி ஒருத்தர், எஸ்.ஐ., கிட்ட, 2 லட்சம் ரூபாய் வாங்கிட்டு, புகாரை மூடி மறைச்சுட்டாருங்க... இதனால, நொந்து போயிருக்கிற பெண் போலீஸ், மீடியாக்களிடம் பேச முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ' 'உமையொரு பாகனா, சாயந்தரமா பேசுதேன்...'' என கூறி, 'கட்' செய்தபடியே, ''இந்த போலீஸ் ஸ்டோரியையும் கேளுங்க வே...'' என்றவாறே தொடர்ந்தார்...
''தென் சென்னையில் , சில 'டாஸ்மாக் பார்'கள்ல விடிய விடிய மது விற்பனை நடக்கு... தென் சென்னையின், சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீஸ் உயர் அதிகாரி, தன் கட்டுப் பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கண்டிப்பான ஒரு உத்தரவு போட்டிருக்காரு வே...
''அதாவது, 'எந்த பார்கள்லயும் ராத்திரி, 10:00 மணிக்கு மேல யாரும் இருக்கக் கூடாது... அதை மீறி திறந்திருந்தா, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்'னு எச்சரிக்கை குடுத்திருக்காரு வே...
''இதனால, அந்த கறார் அதிகாரியை இட மாற்றம் செய்ய, பார்கள் நடத்துற, தி.மு.க., - அ.தி.மு.க., புள்ளிகள் கூட்டணி போட்டு பெரும் தொகையை வசூல் பண்ணியிருக்காவ... இந்த பணத்தை ரெண்டு பங்கா பிரிச்சு, தென் சென்னையின் ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகிட்ட கொடுத்து, மற்றொரு பங்கை கொடுக்க வேண்டிய இடத்துல கொடுத்து, 'சீக்கிரமா அதிகாரியை மாத்துங்க'ன்னு கேட்டி ருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.