/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கனிம வள கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரி!
/
கனிம வள கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரி!
PUBLISHED ON : ஆக 25, 2025 12:00 AM

பி ல்டர் காபியை உறிஞ்சியபடியே, ''திருச்சி வரைக்கும் போய் வழியனுப்பி இருக்கா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரைங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரையில் சமீபத்துல விஜயின், த.வெ.க., கட்சி மாநாடு நடந்துதே... இதுக்கு வந்த விஜய், சென்னையில் இருந்து வேன் மூலமாகவே வந்துட்டார் ஓய்...
''மாநாட்டுல பேசி முடிச்சதும், அதே வேன்ல உடனே கிளம்பிட்டார்... விஜய்க்கு, மத்திய அரசின், 'ஒய்' பிரிவு பாதுகாப்பு குடுத்திருக்கால்லியோ... இதனால, நெடுஞ்சாலை முழுக்க திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத் துக்கு மத்தியில், அவரை தனி பாதையில உள்ளூர் போலீசார் பத்திரமா அழைச்சுண்டு போனா ஓய்...
''அவரது வேன் கூடவே போய், திருச்சியில விட்டுட்டு தான் திரும்பியிருக்கா... திருச்சியில் இருந்து அந்தந்த மாவட்ட போலீசார், விஜய் வேனை, 'பிக்கப்' பண்ணி, சென்னை வரை பாதுகாப்புக்கு போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்டு வைக்க போறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், ஏரல் பேரூராட்சியில், 15 கவுன்சிலர்கள் இருக்காங்க... தி.மு.க.,வின் சர்மிளாதேவி தலைவரா இருக்காங்க... மீதமுள்ள, 14 கவுன்சிலர்களில், தி.மு.க., எட்டு, அ.தி.மு.க., இரண்டு, அ.ம.மு.க., நான்கு பேர் இருக்காங்க பா...
''இந்த சூழல்ல, 'தலைவருக்கு எதிரா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டம் நடத்தணும்'னு, தி.மு.க., கவுன்சிலர்கள் அஞ்சு பேர், கலெக்டர் அலுவலகத்தில் மனு குடுத்திருக்காங்க பா...
''அதுல, 'பேரூராட்சி தலைவரின் செயல்பாடுகள் மக்கள் நலனுக்கும், நிர்வாக நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அவர் மீது நம்பிக்கை இல்ல... முறையா கூட்டம் நடத்தாமலும், எங்களது பங்களிப்பு இல்லாமலும் தீர்மானங் களை நிறைவேத்துறாங்க... அனைத்து பணிகள்லயும் அவரது கணவர் மணிவண்ணனின் குறுக்கீடு இருக்கு'ன்னு சொல்லி இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கனிம வள கொள்ளையை கண்டுக்காம இருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஏராளமான கல் குவாரிகள் இருக்கு... பல குவாரிகள் உரிமம் இல்லாம இயங்குறதும் இல்லாம, சட்ட விரோதமா கனிமங்களை அதிகமா வெட்டியும் எடுக்காவ வே...
''இது சம்பந்தமான வழக்குல, அதிகாரிகள் குழு, அனைத்து குவாரி கள்லயும், 'ட்ரோன்' மூலமா சர்வே செய்து, கூடுதலா கனிமங்களை எடுத்த குவாரிகளுக்கு அபராதம் விதிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு... ஆனா, மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் குழுவினர், ஒரு சில குவாரிகள்ல மட்டும் ஆய்வு செய்து, விதி மீறிய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கும்படி, வருவாய் துறை அதிகாரிக்கு பரிந்துரை அறிக்கை அனுப்புனாவ வே...
''கிட்டத்தட்ட, 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அளவுக்கு விதிமீறல்கள் நடந்திருக்கு... ஆனா, வருவாய் துறை அதிகாரி, அபராதம் விதிக்காம, பல மாதங்களா அந்த அறிக்கையை கிடப்புல போட்டிருக்காரு...
''இதனால, கனிம வள அதிகாரிகளும் மீதமுள்ள குவாரிகள்ல ஆய்வுக்கு போகாம இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே, ''குமார், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே எழ, மற்றவர் களும் கிளம்பினர்.