/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ஒண்டிப்புதுாரில் தொற்றுநோய் பரவும் அபாயம்
/
ஒண்டிப்புதுாரில் தொற்றுநோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 28, 2025 09:49 PM

குடியிருப்பு நடுவே புதர்காடு வேடப்பட்டி, பெருமாள் நாயுடு ரோடு, ஆறாவது வீதியில், மழைநீர் வடிகால் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மண்ணை,வீட்டின் அருகே கொட்டியுள்ளனர். அந்த இடத்தை சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷஉயிரினங்கள் வீட்டிற்குள் வருகின்றன.
- கோகுல், வேடப்பட்டி.
வீணாகும் குடிநீர் கணபதி மெயின் வீதி, பாரதி நகர், காவலர் குடியிருப்பு சாலை, திரவியம் லட்சுமி பைப் கம்பெனி எதிரில் குடிநீர் குழாய் உடைந்து அதிக தண்ணீர் வீணாகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீரால், பாதசாரிகள் மற்றும் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- மாணிக்கம், பாரதிநகர்.
கடும் துர்நாற்றம் ஒண்டிப்புதுார், சவுண்டப்பன் நகர், புதுஇட்டேரி வீதி, காமராஜர் சிலை பின்புறம் சாக்கடை கால்வாயில் அதிக கழிவுகள் குவிந்துள்ளன. இதனால், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- சவுண்டப்பன், புதுஇட்டேரி வீதி.
தெருவிளக்கு பழுது பனைமரத்துார் மெயின் ரோடு, தெலுங்குபாளையம், 74வது வார்டு, 'எஸ்.பி -17 பி - 8' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு சரியாக எரியவில்லை. அடிக்கடி கம்பத்தில் விளக்கு பழுதாவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- செல்வராஜ், பனைமரத்துார்.
சாலை கடக்க சிரமம் வடகோவை பேருந்து நிலையம் அருகே, அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. பள்ளி குழந்தைகள், வயதானவர்கள் சாலையை கடப்பதற்கே சிரமப்படுகின்றனர். வடகோவை, குஜராத்தி சமாஜ் முன் உள்ள இடைவெளியை சரிசெய்து, எளிதாக சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டும்.
- வரதராஜன், வடகோவை.
பள்ளங்களால் விபத்து போத்தனுார், கடைவீதி முதல் டி- மார்ட் வரை சாலையின் ஒரு புறம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. உயிரிழப்பு நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
குப்பைமேடாகும் தடுப்பணை கணுவாய் தடுப்பணை முழுவதும் குப்பையாக உள்ளது. புகாரின் பேரில், கழிவு அகற்றியபின்பும் மீண்டும், மீண்டும் குப்பை கொட்டப்படுகிறது. சில இடங்களில் குப்பையை தீயிட்டும் கொளுத்துகின்றனர். தடுப்பணையை காக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- ஆறுமுகம், கணுவாய்.
வணிக வளாகத்தின் கடும் அவலம் டாடாபாத், ராஜூ வீதியில் உள்ள கோவை மாநகராட்சி வணிக மற்றும் அலுவலக வாளாகம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. வளாகத்தினுள் பெருமளவு குப்பை தேங்கியுள்ளது. இரவு நேரங்களில், மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- துரைராஜ், டாடாபாத்.
சாலை பணிகள் சுணக்கம் கோவை மாநகராட்சி, எட்டாவது வார்டு, நேரு நகர் மேற்கு வீதிகளில் சாலை போடுவதற்கு எம் சாண்ட் மற்றும் ஜல்லி கலவை போட்டு சென்றனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் தார் ரோடு அமைக்கவில்லை. ஜல்லி பெயர்ந்து வருவதால் டூ வீலர்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. விரைவில் தார் ரோடு அமைக்க வேண்டும்.
- நடராஜன், நேருநகர்.
பள்ளங்களை சீரமைக்க சாக்கு வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு, ரஹீம் நகர் நுழைவாயில் அருகே சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. புகார் தெரிவித்தால் நெடுஞ்சாலைத்துறையினர்தான் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். பெரிய விபத்துகள் நிகழும் முன் பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.
- மருதாச்சலம், வடவள்ளி.
இருளால் அச்சம் தெற்கு மண்டலம், 98வது வார்டு, 'எஸ்.பி -14 - பி-23' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 15 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் இந்தப்பகுதியில் வெளியே நடக்கவே அச்சமாக உள்ளது. பெண்கள், முதியவர்கள் இரவு, 7:00 மணிக்கு மேல் செல்ல முடியவில்லை.
- தியாகராஜன், தெற்கு மண்டலம்.
துார்வாராததால் அடைப்பு கோணவாய்க்கால்பாளையம், 88வது வார்டு, பாலு மெடிக்கலுக்கு எதிர்ப்புறம் சாக்கடை துார்வாராமல், அதிக துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கழிவு அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
- முத்துக்குமார், 88வது வார்டு.
மோசமான ரோடு நீலிக்கோணாம்பாளையம் பேருந்து நிறுத்தம் முதல், வசந்தா மில் ரோடு வரை சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தினமும் இப்பகுதியில் சிறிய, சிறு விபத்துக்கள் நடக்கின்றன. சாலையில் உள்ள குழிகளை, தார் கொண்டு மூட வேண்டும்.
- ராபர்ட், சிங்காநல்லுார்.