தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘எந்த தொழிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது!’

‘எந்த தொழிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது!’

‘எந்த தொழிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது!’


PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கயிறு திரிக்கும் தொழிலில், மாதம் 2 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த, 25 வயதான கோகிலா நல்லதம்பி:

எங்கள் குடும்பத்தில், நான்காவது தலைமுறையாக இந்த தொழிலை செய்கிறோம். நான் பி.காம்., முடித்ததும் சும்மா இருக்கக்கூடாதுன்னு, அப்பாவுக்கு உதவியாக கடையையும், கயிறு உற்பத்தியையும் பார்க்க ஆரம்பித்தேன்.

கடந்த 2023ல் அப்பா திடீரென இறந்து விட்டார். ‘ஒரு பொண்ணு இந்த தொழிலை எப்படி நடத்த முடியும்... என்ன செய்துடப் போறா’ன்னு அலட்சியமாக நினைத்து, எங்களின் வாடிக்கையாளர்களை தட்டிப்பறிக்க பார்த்தனர் போட்டியாளர்கள்.

ஆனால், 50 கிலோ தென்னை நார் மூட்டையை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் அளவுக்கு என்னை மாற்றிக் கொண்டேன். எதற்கும் பயந்து பின்வாங்காமல், எதிர்த்து நின்று போராட கற்றுக் கொண்டேன்.

என்னிடம் 1970ம் ஆண்டில், 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பழமையான கயிறு திரிக்கும் இயந்திரம் உள்ளது. அது தான் இன்றும் எங்களுக்கு கைகொடுத்து வருகிறது.

எந்த செயற்கை பொருளையும் சேர்க்காமல், சுத்தமான தென்னை நாரில் மட்டுமே திரிப்பதால், தண்ணீரில் ஊற வைத்து இழுத்து கட்டினால், 15 ஆண்டுகள் வரை எங்கள் கயிறுகளுக்கு எதுவும் ஆகாது.

மாதம் இரு முறை பொள்ளாச்சி, கோவை, கேரளா என லோடு கணக்கில் கயிறு செல்லும். எல்லா செலவுகளும் போக, ஒரு மாதத்திற்கு குறைந்தது, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் வழக்கமாக 20 பெண்கள், 15 ஆண்கள் வேலை செய்கின்றனர். பெரிய தேர்வடம், ‘ஆர்டர்’ வந்தால், 60 பேர் வரை வேலைக்கு வந்துவிடுவர்.

காலை டிபன், மதியம் சாப்பாடு, மாலை டீ எல்லாமே எங்கள் வீட்டில் இருந்தே சமைத்து கொடுத்து விடுவோம். அவர்கள் திருப்தியாக சாப்பிட்டு வேலை பார்க்கணும் என்பது தான் தாத்தாவும், அப்பாவும் கற்றுக் கொடுத்த முதல் பாடம்.

முதலாளி – தொழிலாளி பாகுபாடு இல்லாமல் எல்லாரையும் குடும்பத்து ஆட்களாக பார்ப்பதால் தான், 40 ஆண்டுகளாக தொழிலாளர்களும், வாடிக்கையாளர்களும் எங்களிடம் நிலைத்து நிற்கின்றனர்.

நம் பாரம்பரிய தேர்வட தொழிலையும், கயிறு தொழிலையும் காப்பாற்ற, அரசு சில உதவிகளை செய்ய வேண்டும். வங்கிகளில் கயிறு தொழில் என்று கூறினாலே, கடன் தர மறுத்து விடுகின்றனர்.

அரசு மூலமாக நிதி உதவியோ, மானியமோ கிடைத்தால், முதலீடு இல்லாமல் தவிக்கிற எத்தனையோ பெண்கள் இந்த தொழிலில் சாதிக்க முடியும். எந்த தொழிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது. நம்பிக்கையுடன் போராடினால், இறைவனின் தேரை இழுக்கும் வடத்தை மட்டுமல்ல; நம் வாழ்க்கையின் உயர்வையும் நம்மாலேயே திரிக்க முடியும்.

* இவரது தொலைபேசி எண் கிடைக்கவில்லை பாஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us