PUBLISHED ON : ஜன 07, 2026 03:10 AM

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர், மருது அழகுராஜ் அறிக்கை:
ஒரு
தந்தை மகனுக்காற்றும் தொண்டாக, தமிழக அரசு ஊழியர்களின் மொத்த குறைகளையும்,
தன் ஒற்றை கையெழுத்தால், முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் முதல்வர்
ஸ்டாலின். இனி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக, மாநில அரசு அலுவலர்கள்,
தாங்கள் இறுதியாக பெற்ற மாத ஊதியத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவர்.
இது, பழைய ஓய்வூதிய திட்டத்தின், முக்கிய பலன்களில் ஒன்றாகும். 'தமிழகத்தை
தலை குனிய விட மாட்டேன்' என்ற அந்த தலைவனது பேனா தலை குனியும் போதெல்லாம்,
இந்த தமிழகமே தலை நிமிர்கிறது.
இதை, 2021
தேர்தலில் ஜெயிச்சதுமே செஞ்சிருக்கணும்... ஆனா, 2026 சட்டசபை தேர்தல்
வெற்றிக்கு, இதை துருப்புச் சீட்டா முதல்வர் எடுத்து வச்சிருந்தாரோ?
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி அறிக்கை:
உத்தர பிரதேசத்தை விட, தமிழகம் முன்னேறிய மாநிலம் தான்; பொருளாதார ரீதியாக பலம் பொருந்திய மாநிலம் தான் என்பதை, யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. அதாவது, தமிழகத்தின் பின்னே வெகுதுாரம் பின்தங்கியிருந்த மாநிலங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் மிக அருகே நெருங்கி வருகின்றன. இதை, காங் கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்; பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
பழம் பெருமை பேசிகிட்டே இருந்தால், முயலை ஆமை வென்ற கதையாக, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் நம்மை தாண்டி போயிடும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:
'தாமிரபரணி ஆற்றை துாய்மைப்படுத்தும் விஷயத்தில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக, தமிழக ஆட்சியாளர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.
நீதிமன்ற கண்டனங்களுக்கு எல்லாம் வெட்கி தலை குனியணும் என்றால், ஆட்சியாளர்கள் எப்பவுமே தரையை பார்த்துட்டு தான் நடக்கணும்!
தமிழக பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி தலைவரும், ஆடிட்டருமான, எஸ்.சுந்தர்ராமன் அறிக்கை:
கடந்த டிசம்பரில், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1.74 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது, பொருளாதார நிலைத்தன்மையை வெளிப் படுத்துகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 6 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி காணப் படுகிறது.
நல்ல விஷயம் தான்... இதை மாநிலங்களுக்கு, மத்திய அரசு உரிய முறையில் பிரிச்சி கொடுக்கணும்... அதுல, அரசியல் வேறுபாடுகள் பார்க்கக் கூடாது!

