PUBLISHED ON : ஜன 06, 2026 01:43 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:
திராவிடத்தால் தான் தமிழ் உயிர்ப்புடன் நிற்கிறது. திராவிடம் என்பது தமிழ் தேசியத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் எதிரானது அல்ல. ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் போராடாமல் இருந்திருந்தால், ஹிந்தியை திராவிடம் தடுக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு நாம் ஹிந்தி பேசுபவர்களாக மாறியிருப்போம். தமிழ் தேசியம் என்ற சொல்லே பிறந்திருக்காது. ஹிந்தி பேசியவர்களா மாறியிருந்தால், என்ன கெட்டு போயிருப்போம்...? தமிழர்களை கிணற்று தவளைகளா மாற்றியது தான் திராவிடம்!
தமிழக காங்., துணை தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ராணி பேட்டி: த மிழக காங்கிரசின் உட்கட்சி பிரச்னைகள் பற்றியோ, கூட்டணி பற்றியோ ஆளாளுக்கு பேசுவது ஏற்புடையதல்ல. தேர்தல் கூட்டணி பற்றி தமிழக தலைமையும், அகில இந்திய தலைமையும் முடிவு செய்து, சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிக்கும். அந்த முடிவு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் அமையும். தொண்டர்கள் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில், இவங்க மேலிடம் நடந்திருந்தால், 1996 சட்டசபை தேர்தலில், த.மா.கா., என்ற ஒரு கட்சியே உருவாகியிருக்காதே! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு: 'தமிழகத்தில் கல்வி வளர்ச்சி இல்லை' என, சிலர் சொல்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியாவில் உயர் கல்விக்கு செல்லும் பெண்கள், 28 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் இது, 48 சதவீதம். படிக்கும் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் தங்குமிடம் வழங்குவதற்காக, தோழி விடுதிகள் கட்டி தரப்பட்டுள்ளன. பெண்களை பாதுகாப்பாக தி.மு.க., ஆட்சி வைத்திருக்கிறது .
சென்னை அண்ணா பல்கலை வளாகம் மற்றும் கோவை விமான நிலையம் அருகே நடந்த பலாத்கார சம்பவங்கள், இவங்க தந்த பாதுகாப்பை படம் பிடிச்சி காட்டிடுச்சே! தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி அறிக்கை: 'தி.மு.க.,விடம் ஓட்டு பிச்சை எடுக்கும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூருக்கு, ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேச தகுதி இல்லை' என, தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, அரசியல் நாகரிகம் தெரியாமல் பேசியுள்ளார். ஓட்டு என்பது ஜனநாயகத்தில் வலிமையான பேராயுதம். அதை பிச்சை என கொச்சைப்படுத்தி பேசியது, ஒட்டுமொத்த வாக்காளர்களின் ஓட்டுரிமையை அவமதிக்கும் செயல். இழிவாக பேசியதற்கு சூர்யா வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், மாணவர் காங் கிரஸ் போராட்டம் நடத்தும்.
சீக்கிரம் போராட்டம் நடத்துங்க... அதை பார்த்து மிரண்டு போயாவது, சூர்யா வருத்தம் தெரிவிக்கிறாரான்னு பார்க்கலாம்!

