PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் பேட்டி: கடந்த 2024ல் இதே
வாக்காளர் பட்டியலை வைத்து தானே லோக்சபா தேர்தல் நடந்தது... பிரதமராக மோடி
தேர்வு செய்யப்பட்டார். அப்படி இருக்கையில், இப்போது என்ன அவசரம்?
வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியமானது தான். ஆனால், அதை ஏன் அவசர
கதியில் செய்ய வேண்டும்? மதியம், 12:00 மணிக்கு மக்கள் சந்திப்புன்னு
சொல்லிட்டு, இரவு, 7:00 மணிக்கு மேல் பிரசார இடத்திற்கு வர்ற மாதிரி,
ஆண்டுக்கணக்கில் இதற்கு நேரம் எடுத்துக்கணுமோ! -------
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, புதிதாக செயல்படுத்தப்படுவது அல்ல. ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் அது குறித்து பேசாத, தி.மு.க., தற்போது மட்டும் ஏன் எதிர்க்கிறது?
இதென்னங்க கேள்வி... பா.ஜ., எதைச் செய்தாலும் எதிர்க்கணும் என்பதுதானே தி.மு.க.,வின் கொள்கை!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் எனத் தொடர்ந்து பழனிசாமிக்கு எதிராக நிறைய பேர் பேசுகின்றனர். அதனால், பதற்றமாகி, தன் இருப்பையும் காட்டிக் கொள்ள ஊடகத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள், ஒருத்தருக்கு எதிராகப் பேசினால் அது பதிலடி; இதையே மற்றவர்கள் செய்தால் உளறலா... என்னங்க உங்க நியாயம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு: கோவில்பட்டி தொகுதியில், ஒன்பது மாதத்துக்கு முன்பிருந்தே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கி விட்டோம். இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என, 30 சதவீதம் பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓட்டுப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும். அதனால் இந்த தேர்தலில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ஆக மொத்தம், அடுத்த முறையும் கோவில்பட்டியில் தான் போட்டி என்பதை நீங்க உறுதி செஞ்சுட்டீங்க!
பா.ஜ., தேசியக்குழு உறுப்பினர், நடிகர் சரத்குமார்: வரும் 2026 தேர்தலில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பா.ஜ., தேசியக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளனர். மாநிலத் தலைவர் நாகேந்திரனோடு இணைந்து தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவோம்.
ஒற்றை இரவில் முடிவெடுத்து, கட்சியை தாரை வார்த்து தந்ததற்கு, ஒரு தொகுதியில் உங்களை வேட்பாளராக அறிவிக்கணும்னு எதிர்பார்க்குறீங்க போலிருக்கே!

