PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

பேச்சு, பேட்டி, அறிக்கை / 08/11/26 ஞாயிறு இதழ்
திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குநருமான கங்கை அமரன் பேட்டி: எங்க அப்பா ராமசாமி, வெள்ளைக்காரன் எஸ்டேட்டில் கங்காணியா வேலை செய்தார். அவரை கிறிஸ்துவரா மதம் மாற்றி, டேனியல் ராமசாமின்னு பெயர் மாற்றினாங்க. வெள்ளைக்காரன் சொந்த நாட்டிற்கு செல்லும்போது அப்பாவுக்கு, 25 ஏக்கர் நிலம் எழுதி கொடுத்து விட்டார். அப்பா கிறிஸ்துவராக வாழ்ந்து மறைந்தார். ஆனால், நாங்கள் கிறிஸ்துவராக இல்லை; ஹிந்துவாக பிறந்து, ஹிந்துவாக வளர்ந்தோம்.
* உங்க அப்பா, தான் பின்பற்றிய மதத்தை உங்க மீது திணிக்காம இருந்ததை பாராட்டியே ஆகணும்!
மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம் அறிக்கை: முன்னொரு காலத்தில், ‘அனைத்திற்கும் ரேஷன் அட்டையே அடிப்படை’ என்றனர். பின், ‘அனைத்திற்கும் ஆதாரம் ஆதார்’ என்றனர். இப்போது, ‘வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது’ என்கின்றனர். அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகள்; அவர்கள், தங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஆயுள் முழுக்க அலைய வேண்டுமா?
* இத்தனை அடையாள அட்டைகள் இருந்தும், 13 கோடி போலி வாக்காளர்கள் இருந்திருக்காங்களே... ஒண்ணுமே வேண்டாம்னு சொன்னா நிலைமை என்னவாகும்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: தமிழகத்தில் ஆம்னி பஸ் பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாட, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற தமிழக மக்களுக்கு, இந்த கட்டண உயர்வு, தாங்க முடியாத கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை, தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
* ஆம்னி பஸ்களின் வேகத்துக்கு மட்டுமல்ல; கட்டணக் கொள்ளைக்கும் கடிவாளம் போட்டே ஆகணும்!
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை: முரசு புயல் நேரத்தில், நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் ஒன்பது பேரின் உடல்கள், ஆந்திராவில் கரை ஒதுங்கியுள்ளன. ‘மீனவர்கள் மாயமானது தொடர்பாக, இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும், அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?
* மீனவர்களை கடலுக்குள் அனுமதித்த அலட்சிய அதிகாரிகள் மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்... அதேநேரம், புயல் பற்றி 24 மணி நேரமும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும், அதை மீனவர்கள் ஏன் அலட்சியப்படுத்தினாங்க?
