PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், விடுமுறை நாளான சனியன்று, சத்துணவு சமையல் கூடத்தை திறக்க, தி.மு.க., மாவட்ட செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவரை வரவேற்க, காலை, 9:00 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
மதியம், 2:00 மணி ஆகியும் எம்.பி., வரவில்லை; மாணவர்கள் பசியில் வாடினர். 3:00 மணிக்கு வந்த எம்.பி.,யை, மாணவர்கள் வரவேற்றனர். உடனே, கட்சியினர் வாங்கி வந்த பிஸ்கட்களை, எல்லா மாணவர்களுக்கும் எம்.பி., கொடுத்தார். பசியில் இருந்த மாணவர்கள் பிரியாணி கிடைத்த மாதிரி, பிஸ்கட்களை வாங்கி வேக வேகமாக சாப்பிட்டனர்.
மாணவர் ஒருவர், 'லேட்டா வந்ததுக்கு பிஸ்கட்டை லஞ்சமா குடுத்து சமாளிக்கிறாரோ...' என முணுமுணுக்க, சக மாணவர், 'அரசியல்வாதி அல்லவா... யாருக்கு என்ன குடுக்கணும்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரு...' என கூற, சக மாணவர்கள் சிரித்தனர்.