PUBLISHED ON : ஏப் 20, 2026 01:40 AM

த.வெ.க., தலைவர் விஜய்: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒன்று தான் என்பதற்கு, அவர்களின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே தெரியும். ஒருத்தர், 10,000 ரூபாய் கொடுத்தால், இன்னொருத்தர், 8,000 ரூபாய்க்கு, 'கூப்பன்' கொடுக்கிறார். ஒருத்தர், 'பிரிஜ்' கொடுத்தால், இன்னொருத்தர், 'பிரிஜ்' வாங்க கூப்பன் கொடுக்கிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு, எம்.எல்.ஏ.,வாக, மாதம் ஒரு முறை வருவேன். என்னை மக்கள் ரொம்ப எளிதாக சந்திக்கலாம்.
டவுட் தனபாலு: அது சரி... தேர்தலில் தப்பி தவறி, ரெண்டு தொகுதிகளில் நீங்க ஜெயிச்சிட்டாலும், ஏதாவது ஒரு தொகுதி பதவியை ராஜினாமா பண்ணியே ஆகணும்... இந்த அடிப்படை அரசியல் சட்டம் கூட புரியாம, ரெண்டு தொகுதிகளுக்கும், எம்.எல்.ஏ.,வாகி மாதம் ஒரு முறை வருவேன்னு சொல்ற உங்களை நம்பி, மக்கள் ஓட்டு போடுவாங்களா என்பது, 'டவுட்' தான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்: 'ஆட்சிக்கு வந்தால், 'டாஸ்மாக்' கடைகளை மூடுவேன்' என, யாராவது வாக்குறுதி அளிப்பரா... மது குடிக்கும் மக்கள், 2.50 கோடி பேர் இருப்பதால், அவர்களது ஓட்டுகளை பெறவே, டாஸ்மாக் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், எனக்கு, குடிக்கும் மக்களின் ஓட்டுகள் தேவையில்லை; நல்ல குடிமக்களின் ஓட்டுகள் மட்டும் போதும். போதையில் இருப்பவனால், நல்ல தலைவனை தேர்வு செய்ய முடியாது.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... அதனால தான், ஓட்டுப்பதிவுக்கு, மூணு நாளைக்கு முன்னாடியே மதுக்கடைகளை மூடுறாங்க... ஆனாலும், 'குடி'மகன்கள் முன்னாடியே வாங்கி, 'ஸ்டாக்' வச்சு, குடிச்சிட்டு தானே ஓட்டுச்சாவடி பக்கமே போறாங்க... அதனால, நீங்க எதிர்பார்க்கும் மாற்றம் நடக்குமா என்பது, 'டவுட்' தான்!
துாத்துக்குடி தொகுதி, தி.மு.க., - எம்.பி., கனிமொழி: தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து, நாங்கள் கருப்பு உடை அணிந்து போராடினோம். ஹிந்துத்துவா கொள்கையை பாதுகாப்பதாக சொல்லும், பா.ஜ.,வுக்கு, கருப்பு தெய்வமான காளி தெய்வம் நினைவில் இல்லை. பெண் சக்தியை பறை சாற்றும் பெண் தெய்வமான காளியும், கருப்பு உடை தான் அணிந்துள்ளார். அவர் தான், அராஜகத்தை விரட்டும் தன்மை கொண்டவர்.
டவுட் தனபாலு: அது சரி... 'காளி உட்பட கடவுள்னு யாரும் இல்லவே இல்லை' என்று பகுத்தறிவு பேசிட்டு இருந்த நீங்க, 'காளி, அராஜகத்தை விரட்டும் தன்மை கொண்டவர்' என்ற உண்மையை ஏத்துக்கிட்டீங்களே... அந்த அளவுக்கு, உங்க மனதில் மாற்றத்தை, காளி ஏற்படுத்தியுள்ளார் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

