PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தி.மு.க.,வை தொடர்ந்து தாக்கி, விமர்சிக்கிறார். அரசி ய லுக்கு புதிதாக யார் வந்தாலும், தி.மு.க., பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால் தான், அவர்கள் எப்போதும் தி.மு.க.,வை விமர்சிக்கின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... கிட்டத்தட்ட, 25 வருஷங்களுக்கும் மேலாக, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய், உங்க கட்சியை விமர்சனம் பண்ணிதான் விளம்பரம் தேடிக்கணுமா... 'விஜய் விமர்சிக்கிறதால தான், தி.மு.க.,வுக்கு விளம்பரம் கிடைக்குது'ன்னு அவரது கட்சியினர் திருப்பி கேட்டா, 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: நம் கட்சியினர் அனைவரும் கட்சி அமைப்புகளின் கட்டுமானத்தை வலுப்படுத்துங்கள். ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்குங்கள். தி.மு.க.,வின ரோடு, பண்பாடான, பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின், சொல்லிய வாக் குறுதி களில் பெரும்பாலான வற்றை நிறைவேற்றி விட்டார். வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க.,வுல எல்லாம் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பண பட்டுவாடாவையே துவங்கிட்டாங்க... நீங்க, இனிமே தான் ஓட்டுச்சாவடி முகவர்களையே தேர்வு செய்ய போறீங்களா...? தமிழகம் முழுக்க உங்க கட்சிக்கு ஓட்டுச்சாவடி முகவர்கள் கிடைச்சுட்டா, அது எட்டாவது அதிசயமாகவே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப் பட்ட மல்லை சத்யா, புதிய கட்சியை துவங்கினார். அதற்கான கொடியை வெளியிட்ட அவர், கட்சியின் பெயரை நவ., 20ல் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். 'திராவிட குடியரசு விடுதலை கழகம் என்பதே புதிய கட்சியின் பெயராக இருக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
டவுட் தனபாலு: ம.தி.மு.க.,வே, தி.மு.க., கூட்டணி எனும் ஆக்சிஜனில் தான் ஓடிட்டு இருக்கு... அங்க இருந்து பிரிஞ்சு வந்த இவர், புதுசா கட்சி துவங்கி என்னத்த சாதிக்க போறார்னு, 'டவுட்' வருதே... தமிழகத்தில் இருக்கும் எத்தனையோ, 'லெட்டர் பேடு' கட்சிகளில் இவரது கட்சியும் சேர்ந்துடுமோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!