PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: நமது மக்கள் சந்திப்பு பயணம், தித்திப்புடன் திருச்சியில் துவங்கியது. தொடர்ந்து, அரியலுார், குன்னம் வரை நீண்டது. நள்ளிரவு கடந்தும், பெரம்பலுாரில் நம்மை சந்திக்க கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை காண இயலாத சூழல் ஏற்பட்டது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலுார் மக்களிடம், என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக, உங்களை சந்திக்க மீண்டும் வருவேன்.
டவுட் தனபாலு: இனிமே அடுத்த சனி, ஞாயிற்று கிழமைகள்ல தானே வெளியில வருவீங்க... அரசியலுக்கு வந்துட்டு, மக்களை சந்திக்கிற பயணத்துக்கு மட்டும் வாய்தா வாங்கவே கூடாது... இப்படி நாள், கிழமைன்னு தள்ளி போட்டுட்டு இருந்தீங்க என்றால், மக்களும் மாற்று கட்சியை தேடி போயிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்: எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும், 100 சதவீதம் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தவே முடியாது. இருக்கிற நிதியை முறையாக பயன்படுத்தி, அதன் மூலம் மக்கள்நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: இதை, நீங்க ஆட்சி பொறுப்புக்கு வர்றதுக்கு முன்னாடியே, அதாவது, 2021 தேர்தல் பிரசாரத்துலயே சொல்லியிருக்கலாமே... தப்பி தவறி அப்படி சொல்லியிருந்தா, அமைச்சராகி இப்ப இப்படி பேட்டி தர்ற இடத்துக்கு வந்திருக்கவே மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: த.வெ.க., தலைவர் விஜய், 'கேட்கல கேட்கல' என சொல்வதை விட, தி.மு.க, ஆட்சியில், திருச்சி மாவட்டத்திற்கு செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை, அவர், 'பார்க்கல பார்க்கல' என்றே கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக, திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை; எந்த பிரயோஜனமும் இல்லை, என விஜய் சொல்வதை, அறிவுசார்ந்த திருச்சி மக்கள் ஏற்க மாட்டார்கள். விஜய் பிரசாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை, தெளிவாக கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: தெளிவான திட்டமிடல் இல்லாம விஜய் பண்ற பிரசாரத்துக்கே, மக்கள் லட்சக்கணக்கில் குவியுறாங்களே... பிற அரசியல் கட்சிகள் மாதிரி தெளிவான திட்டமிடுதலுடன், காசு கொடுத்து கூட்டம் சேர்த்தார் என்றால், உங்க கட்சி எல்லாம் அவர் முன்னாடி நிற்கவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!