PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

தமிழக சபாநாயகர் அப்பாவு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 'விண்வெளியில் முதன் முதலில் கால் வைத்தது அனுமன் தான்' என சொல்லி உள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.,வினர், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர்கள்; பிற்போக்கு கருத்துகளை தான் பரப்பி வருகின்றனர். பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்டவர். இதை பற்றி யாரும் பேசுவதில்லை.
டவுட் தனபாலு: என்னமோ பயங்கரவாத கருத்துகளை ஆர்.எஸ்.எஸ்., பரப்புவது மாதிரி குற்றம் சாட்டுறீங்களே... தேச பக்தி, தனி மனித ஒழுக்கம், கலாசாரம், பண்பாட்டை காக்கும்படி ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்துவது, திராவிட சித்தாந்தம் கொண்ட உங்களுக்கு ஏன் வேப்பங்காயாக கசக்குது என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு: என் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காகவே, திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக பஸ் நிலையம் கட்டியிருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அப்பகுதியில் எனக்கு, 300 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் கூறியுள்ளார். பழனிசாமிக்கு சவால் விடுகிறேன்... அவர் சொல்வதை நிரூபித்தால், என் சொத்து என குறிப்பிடுபவற்றை பழனிசாமியே எடுத்துக் கொள்ளட்டும்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 40 வருஷங்களுக்கும் மேலா அரசியல்ல இருக்கீங்க... 300 ஏக்கர் நிலத்தையும் உங்க பெயர்லயே வச்சிருக்கும் அளவுக்கா அப்பாவியா இருப்பீங்க... அந்த துணிச்சல்ல தான் இப்படி சவால் விடுறீங்களோ என்ற, 'டவுட்' வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: கடந்த 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆட்சிக்கு வந்து, 50 மாதங்களில், 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன; 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவே இல்லை. 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்; 3.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை; மாதம் ஒரு முறை மின் கட்டணம்; காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; கல்விக் கடன் தள்ளுபடி போன்ற முக்கியமான வாக்குறுதிகள், பேப்பரில் மட்டுமே உள்ளன.
டவுட் தனபாலு: 'மத்திய அரசு நிதி தராமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதால் தான், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியலை... அதனால, மறுபடியும் எங்களை ஆட்சியில் அமர்த்துங்க... சொச்ச வாக்குறுதிகளையும் கண்டிப்பா நிறைவேற்றி விடுவோம்'னு வர்ற தேர்தல்ல தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டாலும் கேட்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!