PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

நடிகை அம்பிகா: மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான், சென்னை, கண்ணகி நகரில் துாய்மை பணியாளர் வரலட்சுமி பலியானார். மனிதாபிமான அடிப்படையில் தான், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்தேன். இதர நடிகர் - நடிகையர் இங்கு வராதது வருத்தம் தான். போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே இந்த மக்கள், நடிகர்களுக்கு தேவையாக உள்ளனர். 'ஏசி' அறையில் இருக்கும் நடிகர்களுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் புரியாது.
டவுட் தனபாலு: ஏழைகளின் கஷ்டங்கள் புரியாம போனாலும் பரவாயில்லையே... விசில் அடித்து தன் படத்தை பார்க்கிற ரசிகனும், அவனை சார்ந்தவங்களும் ஓட்டு போட்டு தன்னை முதல்வராக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களே... அதுதான் நடிகர்கள் செய்யும் பெரிய தவறு என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: 'அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் வீக்கமாகுமே தவிர, அது வலிமையாகவோ, வளர்ச்சியாகவோ ஆகாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவரது குடும்பத்தில், அவர் முதல்வர், மகன் துணை முதல்வர்; மரும கன் சூப்பர் முதல்வர். தங்கையும், மற்றொரு மருமகனும் எம்.பி.,க்கள். வீக்கத்தை பற்றி பேச, ஸ்டாலினை விட பொருத்தமானவர், வேறு யார் இருக்க முடியும்.
டவுட் தனபாலு: மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., ஏவும் அம்பை எடுத்தே, அவங்களை நோக அடிக்கிறீங்களே... பா.ஜ., மாநில தலைவர் பதவியில் இருந்து உங்களை நீக்கியதால், நஷ்டம் உங்களுக்கு இல்லை... பா.ஜ.,வுக்கு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மா.கம்யூ., - இந்திய கம்யூ., கட்சிகள் கூட்டறிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்பின், 50 சதவீத வரி விதிப்பால் ஜவுளி, பின்னலாடை, ஆபரணங்கள், இறால், தோல் பொருட்கள், மின் சாதனங்கள் என பல தொழில் கள் பாதிக்கப்படும். ஏற்றுமதியில் , 66 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு, 4,820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்டித்து, முக்கிய தொழில் நகரங்களில் செப்., 5ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
டவுட் தனபாலு: பாரத தேசம் பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது... வெறும், 400 வருஷம் வரலாறுதான் அமெரிக்காவுக்கு... 1,000 வருஷத்துக்கு முன் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் கடல் கடந்து வணிகம் செய்தப்ப, அமெரிக்கா இருந்துச்சா... அதனால, அமெரிக்காவை கைகழுவிட்டு, உலக வரைபடத்தில் இருக்கும் பல நுாறு நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க, நமக்கு கிடைச்சிருக்கும் வாய்ப்பை பயன் படுத்திக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!