/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
முதல்வர் அறிவிப்பில் இடம் பெற்ற 'தினமலர்' செய்தி; வேர் வாடலால் பாதித்த தென்னை மரங்களை அகற்ற ரூ.14 கோடி நிதி!
/
முதல்வர் அறிவிப்பில் இடம் பெற்ற 'தினமலர்' செய்தி; வேர் வாடலால் பாதித்த தென்னை மரங்களை அகற்ற ரூ.14 கோடி நிதி!
முதல்வர் அறிவிப்பில் இடம் பெற்ற 'தினமலர்' செய்தி; வேர் வாடலால் பாதித்த தென்னை மரங்களை அகற்ற ரூ.14 கோடி நிதி!
முதல்வர் அறிவிப்பில் இடம் பெற்ற 'தினமலர்' செய்தி; வேர் வாடலால் பாதித்த தென்னை மரங்களை அகற்ற ரூ.14 கோடி நிதி!
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

பொள்ளாச்சி: தென்னையில், வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டுவதற்காக இழப்பீடு வழங்க, 14.04 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும், என, முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு, தென்னை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தென்னையில், நோய் தாக்குதல்கள், தேங்காய்க்கு விலை சரிவு, கொப்பரை கொள்முதல் செய்தாலும் உரிய பலன் இல்லை போன்ற காரணங்களினால் விவசாயிகள் திணறினர். கேரள வேர் வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால், தென்னை மரங்களை வெட்டி அகற்றினர்.
தென்னை விவசாயத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால், பட்ஜெட்டில் இதுபற்றி அறிவிப்பு எதுவும் இல்லாதது, ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்; ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.
களமிறங்கிய 'தினமலர்'
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. வேர்வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதலால் மரங்கள் பாதிப்பு, நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும்; மரங்களை வெட்டுவதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தேங்காய்க்கு விலை இல்லை, கள் இறக்க அனுமதிக்க வேண்டும், நீரா பானம் தொழில்நுட்ப உதவி தேவை, தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் கட்டுரையில் விவசாயிகளின் குரலாக வெளியிடப்பட்டது. இதையடுத்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாயிலாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், நேற்று பொள்ளாச்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில்முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை அறிவித்தார். அதில், ''பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோய் பாதித்த தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்காக, 14.04 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். மூன்று லட்சம் தென்னங்கன்றுகள், 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலவசமாக வழங்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு தேங்காய் விற்பனை செய்யப்படும். கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக, தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லரை விற்பனை நிலையங்களின் வாயிலாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
ஆதார விலையில்...
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது: வேர் வாடல் நோயால் பாதித்த தென்னை மரங்களை வெட்டி அகற்ற நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கதக்கது.இந்த நிதி முறையாக விவசாயிகளுக்கு சென்றடையவும், ஒரு மரத்துக்கு எவ்வளவு தொகை என நிர்ணயித்து வழங்க வேண்டும். கூட்டுறவு விற்பனை சங்கங்களின் வாயிலாக தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லரை விற்பனை நிலையங்களின் வாயிலாக விற்பனை செய்யும் போது, ஆதார விலைக்கே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

