/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
மாணவர்களுக்காக 'தினமலர்' ஏன் உழைக்கிறது?
/
மாணவர்களுக்காக 'தினமலர்' ஏன் உழைக்கிறது?
PUBLISHED ON : ஜன 10, 2026 12:00 AM

எங்கள் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆரம்பித்த முதல் ஆண்டிலிருந்தே, பாரம்பரியமிக்க 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து மாணவர் முன்னேற்றத்திற்காக பல நிகழ்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
மாணவர் வளர்ச்சியில் தினமலருக்கு மிகுந்த அக்கறை உண்டு. பள்ளி பருவ மாணவர்கள் நல்லொழுக்கத்துடன், நல்லவற்றை் கற்று, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காக 'பட்டம்' என்ற தனி இதழை வெளியிடுகிறது. பட்டம் இதழை, தமிழகமெங்கும், ஆயிரக்கணக்கான பள்ளிகளில் மாணவர்கள் தினசரி வாசிக்கிறார்கள்.
இதழோடு நின்றுவிடாமல், மாணவர்களின் சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்கும்படி பிரம்மாண்டமான வினாடிவினா நிகழ்ச்சிகளை, ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நடத்துகிறது. நாங்களும் அதில் தவறாமல் பங்குகொண்டு, மாணவர்களுடைய வளர்ச்சியில், எங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சிக்கு நானும் செல்வதுண்டு. மாணவர்கள் எவ்வளவு ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கண்டு ரசிப்பேன். இந்நிகழ்விற்காக ஓராண்டு வரை தயார்படுத்திக் கொண்டு மாணவர்கள் பங்கு கொள்கிறார்கள் என்பது வியப்பளிக்கும் விஷயம்.
பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் இருந்து வரும் மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மாணவர்களும் நல்ல கல்வியை நல்ல முறையில் கற்க வேண்டும்; வாழ்கையில் சாதிக்க ஏதுவான துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு, 'ஜெயித்துக் காட்டுவோம்', 'வழிகாட்டி' உள்ளிட்ட பல்வேறு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை தினமலர் நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில், சாதனையாளர்கள், வெற்றியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் என பல்வேறு விதமான அனுபவம் உள்ள வல்லுநர்கள், மாணவர்களை ஊக்குவித்து, வழிகாட்டுகிறார்கள். பொதுவான ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளாக அமைந்துவிடாமல், குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி இந்த நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இதற்கு, தினமலர் நடத்தும் 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் வழிகாட்டி' ஓரு நல்ல உதாரணம். பிளஸ்-2 ரிஸல்ட் வந்தவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களால், தங்களுக்கு தேவையான கல்லூரியையும், பாடத்தையும் தெளிவான சிந்தனையுடன் தேர்வு செய்ய முடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக, தினமலரின் இந்த முன்னெடுப்பை நாங்களும் இணைந்து வழங்கி வருகிறோம்.
கல்வி நிகழ்ச்சிகள் வாயிலாக தினமலர் எந்த பலனையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், முழு ஈடுபாடுடனும், ஆர்வத்துடனும் செயல்படுகிறது. தினமலருடன் தொடர்ந்து நாங்கள் பயணிப்பதால், அவர்களுடைய எண்ணங்களையும், அவர்கள் எதற்காக இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்துகிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
'வருங்காலத்தில், ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்கான நாடாக, நம் நாடு மாற வேண்டும். ஒரு வலிமையான வளர்ந்த நாடாக மாற வேண்டும். அதை நிர்மாணிக்கக் கூடியவர்கள் மாணவர்கள் தான்' என்பதை புரிந்து கொண்டு, தினமலர், இந்த நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறது
சமூக அக்கறையுடனான இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும். தினமலர் வலிமையுடன் வளர்ச்சியடைய வேண்டும். மாணவர்களுக்காக தொடர்ந்து உழைத்திட வேண்டும். அதற்கு நாங்களும் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி, தினமலர் நாளிதழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன், வாழ்த்தி மகிழ்கிறேன்.
பி. ஸ்ரீராம்
தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

