PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

‘இவரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது; யார் சொல்வது...?’ என, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் பற்றி, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
‘நாட்டில் முக்கியமான அரசியல் நிகழ்வுகள், போராட்டங்கள் நடக்கும்போதெல்லாம், ராகுல் வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறார்’ என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது.
சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், தொடக்கத்தில் ராகுலும் அதில் பங்கேற்றார். பின், திடீரென அவரை காணவில்லை. விசாரித்த போது, அவர் நான்கு நாள் பயணமாக வியட்நாம் நாட்டுக்கு சென்றது தெரியவந்தது.
இதற்கு முன், 2015ல் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும், ராகுல் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்; இரண்டு மாதங்களுக்கு பின்னர் தான் நாடு திரும்பினார்.
கடந்த 2019ல், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தபோதும், ராகுல் நாட்டில் இல்லை. 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு பார்லிமென்டில் விவாதம் நடந்தபோதும், ராகுல் ஜெர்மனிக்கு பறந்து விட்டார்.
‘கடந்த 20 மாதங்களில் மட்டும், மூன்று முறை வியட்நாம் நாட்டுக்கு ராகுல் சென்று வந்துள்ளார். வியட்நாமில் அப்படி என்ன தான் இருக்கிறது...?’ என புலம்புகின்றனர், காங்., கட்சியினர்.
