PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

‘கூட்டணி கட்சி என்பதற்காக, பா.ஜ.,வுக்கு ரொம்பவும் தான் ஜால்ரா அடிக்கிறார்...’ என ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து, அம்மாநில காங்கிரசார் எரிச்சலுடன் கூறுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்ததாகவும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்; இதற்காக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியினரை சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார்.
‘மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது தான், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, அவை சிறப்பாகச் செயல்பட்டதாக காங்., கட்சியினர் கூறினர். தற்போது அக்கட்சி தோல்வி அடைந்ததால் குற்றஞ்சாட்டுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, மக்களின் நம்பிக்கையை பெற காங்., முயற்சிக்க வேண்டும்...’ என்றார்.
இதனால் கடுப்பான காங்., கட்சியினர், ‘பா.ஜ.,வுக்கு வக்காலத்து வாங்கும் சந்திரபாபு நாயுடு, தன் கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.,வில் சேர்ந்து விடலாமே...’ என்கின்றனர்.
சந்திரபாபு நாயுடுவோ, ‘உண்மை கசக்கத் தான் செய்யும்...’ என்கிறார்.
