PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

'எதிர்ப்பு குரல் அதிகமாகி விட்டது; இனி நாம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே.
உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா, 2022ல் இரண்டாக உடைந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.,க்களுடன் வெளி யேறி, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார். இதற்கு பரிசாக, அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற போதும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை; துணை முதல்வர் பதவியே கிடைத்தது.
இந்த சூழலில் தான், 'உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும்' என, உள்ளுக்குள்ளேயே குரல் எழுந்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள், 'கட்சி மீண்டும் ஒன்றாக இணைந்தால் தான் எதிர்காலம்; இல்லையெனில் படிப்படியாக அழிந்துவிடும். இரண்டு கட்சி தலைவர்களும் பகையை மறந்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்...' என, பேசத் துவங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, 'அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர், இதுபோல் பேசுகின்றனர்; இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை...' என்கிறார்.