PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

'தேர்தல் நெருங்கும் நேரத்தில், இவர் எதற்கு மூக்கை நுழைக்கிறார்...' என, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், பீஹாரில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணிக்கு எதிராக, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணி களத்தில் உள்ளது.
இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, லாலுவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில் தான், தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் என்ற கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
'பீஹார் காங்கிரசில், கண்ணையா குமார் உள்ளிட்ட திறமைசாலிகள் பலர் உள்ளனர். இவர்கள், தேஜஸ்வி யாதவை விட திறமையானவர்கள். இவர்களில் யாராவது ஒருவரை, 'இண்டியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம்...' என, கூறியுள்ளார்.
இதனால், கடுப்பான தேஜஸ்வி ஆதரவாளர்கள், 'அப்படியானால், எங்கள் தலைவருக்கு திறமை இல்லையா...' என, கொந்தளிக்கின்றனர்.
காங்., கட்சியினரோ, 'எங்களுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்ப டுத்தும் முயற்சி...' என, கைகளை பிசைகின்றனர்.