PUBLISHED ON : ஜன 03, 2026 01:12 AM

'சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள், அடிதடி தகராறுகளுக்கு எல்லாம், சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனக் கூறி, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துவது முறையா...' என குமுறுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தான் வெற்றி பெறும் என, பரவலாக பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்து, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார், மம்தா.
ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகள் மம்தாவுக்கு சோதனைக் காலமாகவே அமைந்தது. 2024ல், கொல்கட்டாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநிலம் முழுதும் மம்தா அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. பா.ஜ.,வினர் இந்த விஷயத்தை வைத்து, மம்தாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
ஒரு வழியாக இதில் இருந்து மீண்டு வந்தார், மம்தா. வரும் மார்ச் அல்லது ஏப்ரலில், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இங்கு நடக்கும் கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல், ஊடுருவல் சம்பவங்களை முன்வைத்து, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதனால், கலக்கம் அடைந்துள்ள மம்தா, 'குழாயடி சண்டையைக் கூட, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாற்றி விடுவர் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.
பா.ஜ.,வினரோ, 'ஊடுருவல்லாம், குழாயடி சண்டையா...' என குமுறுகின்றனர்!

