PUBLISHED ON : ஜன 02, 2026 02:03 AM

'இவரால் மட்டும் எப்படி முடிகிறது...' என, பிரதமர் நரேந்திர மோடியை நினைத்து ஆச்சரியப்படுகின்றனர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் எம்.பி.,க்கள்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததை அடுத்து, டில்லியில் உள்ள தன் வீட்டில், தே.ஜ., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு சமீபத்தில் விருந்து வைத்தார், மோடி. அதில், விதவிதமான சைவ உணவுகள் எம்.பி.,க்களுக்கு பரிமாறப்பட்டன.
அப்போது, 'தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், அவர்களுக்கு சென்று சேர்கின்றனவா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை, எம்.பி.,க்களுக்கு பிரதமர் வழங்கினார்.
தொடர்ந்து, எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார். எம்.பி., ஒருவர், 'நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே; அதன் ரகசியம் என்ன?' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர், 'நான் எங்கு சென்றாலும், மொபைல் போனை எடுத்துச் செல்வது இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துகிறேன். இதனால், எனக்கு நேரம் மிச்சமாகிறது. உடல்நலத்தை பேண, யோகா போன்ற பயிற்சிகளை செய்கிறேன்...' என்றார்.
இதைக் கேட்ட சில எம்.பி.,க்கள், 'நம்மால் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாதே; அவரால் முடியும்; நம்மால் முடியுமா...?' என, புலம்பினர்.

