PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

'அதிகாரத்தில் இல்லாவிட்டால் யாருமே மதிக்க மாட்டார்கள் போலிருக்கிறதே... அதிலும் இந்த போலீசார் மிகவும் மோசம்...' என புலம்புகிறார், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுவதாக கூறி, காலி உர பைகளுடன், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாதில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு ராமா ராவ் தலைமை வகித்தார். அவரை போலீசார் கைது செய்து, வாகனத்தில் ஏற்ற அழைத்துச் சென்றனர்; அப்போது ராமா ராவ் ஒத்துழைக்க மறுத்தார். அவரை, 'தரதர'வென இழுத்தும், குண்டு கட்டாக துாக்கிச் சென்றும் வாகனத்தில் ஏற்றினர்.
'ஏசி' அறைக்குள்ளேயே இருந்து பழக்கப்பட்ட ராமா ராவுக்கு, போலீசாரின் இந்த அணுகுமுறை பீதியை ஏற்படுத்தியது,
பின், இந்த அனுபவம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ராமா ராவ், 'என் தந்தை சந்திரசேகர ராவ், 10 ஆண்டுகள் தெலுங்கானாவின் முதல்வராக பதவி வகித்தவர்; நானும் அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது, எத்தனை போலீஸ் அதிகாரிகள் எனக்கு சலாம் போட்டிருப்பர் தெரியுமா?
'ஆனால், இப்போது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், தரதரவென இழுத்து சென்று கைது செய்கின்றனரே... இதெல்லாம் நியாயம் தானா...' என, கண்ணீர் வடித்துள்ளார்.