PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

'பல கட்சிகள் மாறினால் இப்படி தான் தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...' என, கர்நாடகா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை கிண்டலடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
'தேர்தல் கமிஷனுடன் கூட்டணி அமைத்து, தேர்தல்களில், பா.ஜ., தலைவர்கள் ஓட்டுகளை திருடுகின்றனர்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த விஷயத்தை முன் வைத்து, பீஹாரில் தொடர் பேரணிகளை அவர் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இந்த பேரணியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்றார். அப்போது, தேர்தல் கமிஷனையும், பா.ஜ., வையும் கடுமையாக சாடினார்.
இதை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா, 'கடந்த, 1991 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள கொப்பால் தொகுதியில் போட்டியிட்டேன்; குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், தேர்தல் கமிஷனின் முறைகேடால் தான், நான் தோல்வியை தழுவினேன்...' என்றார்.
இந்த விஷயத்தை, பா.ஜ.,வினர் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். '1991ல் நடந்த தேர்தலில் சித்தராமையா போட்டியிட்டபோது, அவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக இருந்தார். அவரை தோற்கடித்தது காங்கிரஸ் வேட்பாளர். அப்படியானால், காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் கமிஷனுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதை சித்தராமையா ஒப்புக்கொள்கிறாரா...' என, பா.ஜ.,வினர் கிண்டலடிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியினரோ, 'சித்தராமையாவுக்கு இது தேவையா...' என, புலம்புகின்றனர்.