உள்ளூர் செய்திகள்

பருந்து

தயாரிப்பு : ஆர்.ஆர்.பிக்சர்ஸ்
இயக்கம் : அழகுமலை
நடிப்பு : அழகுமலை, விநாயக், ஷர்மிஸா, அப்புக்குட்டி, பேரரசு, மன்சூர்அலிகான், பேரரசு
ஒளிப்பதிவு : காசிவிஸ்வநாதன்
இசை : ஜேம்ஸ் ரூபர்ட்
வெளியான தேதி : அக்டோபர் 9, 2026
நேரம் : 2 மணிநேரம் 04 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் மாரிமுத்து, சர்மிளா மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், இளைய மகள் டிரைவருடன் ஓடிப் போய்விடுகிறார். அந்த ஊர்தலைவர் அழகுமலையை பார்த்து தங்கள் நிலையை சொல்லி வருத்தப்படுகிறார்கள் பெற்றோர்கள். '' நீ எனக்கு நண்பன். உனக்காக அந்த பெண்ணை தேடி அழைத்து வருகிறேன்'' என வாக்கு கொடுக்கிறார் அழகுமலை. தனது தம்பி விநாயக் உதவியுடன் அந்த பெண்ணை தேடுகிறார். பெண்ணின் தாய்மாமா மன்சூர்அலிகானும் அந்த காதல் ஜோடியை தேடுகிறார். அந்த ஜோடி சிக்கியதா? அவர்களின் காதல் என்ன ஆனது? என்பது பருந்து படத்தின் கதை

கிராமத்து பின்னணியில் காதல் கதை, அதில் மோதல், பெரிய மனிதர்கள் தலையீடு, காதலர்கள் தவிப்பு என வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கிற அழகுமலை, படத்தை தயாரித்து இருக்கிறார். அதனால், அவரை சுற்றியே கதை நடக்கிறது. நடுத்தர வயதான அவரும் இயல்பான நடிப்பை தந்து இருக்கிறார். சில சீன்களில் மென்மையான டயலாக்குகளில் மனதில் நிற்கிறார். ஆனால், சண்டைக்காட்சிகள் அவருக்கு செட்டாகவில்லை. புதுமுகம் என்பதால் இயக்கம், நடிப்பிலும் பல குறைகள்.

காதல் ஜோடியை தேடுகிற விநாயக், சர்மிஸா காதல் காட்சி சுமார் ரகம். அவர்களுக்கான பாடல் காட்சி மட்டும் கலர்புல். பிரச்னையில் சிக்குகிற காதல் ஜோடிகளாக உமா, மூர்த்தி நடித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு வேலை இல்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட சீன்களும் அதிகம் இல்லை.கிளைமாக்சில் மட்டும் அழுது,க தறி வேறு முடிவு எடுக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் சென்ட்ராயன், அப்புகுட்டி செய்யும் வித்தைகள் சிரிப்பை தரவில்லை. எப்படா இந்த சீன் முடியும் என இருக்கிறது.

இவர்களை தவிர, காதல் ஜோடிகளை தேடும் மன்சூர் அலிகான் நடிப்பு என்ற பெயரில் வழக்கமான சேட்டை செய்கிறார். கவுரவ வேடத்தில் வக்கீலாக வருகிறார் இயக்குனர் பேரரசு. அவர் சம்பந்தப்பட்ட சீன்கள் விறுவிறுப்பு என்றாலும், அது முழுமை பெறவில்லை. சின்ன பட்ஜெட் படம் என்பதால் அதற்கான குவாலிட்டி தெரிகிறது. இந்தவகை படங்களுக்கு ஏற்ற வழக்கமான ஒளிப்பதிவு, வழக்கமான இசை. புதுமுகங்கள் நடித்து இருப்பதாலும், சின்ன பட்ஜெட் என்பதாலும் படத்தில் சினிமாவுக்கு உரிய மாயஜாலம், பில்டப், ரசிக்கிற காட்சிகள் அதிகம் இல்லை.

காதல் என்பது வேறு, சின்ன வயதில் வரும் ஈர்ப்பு வேறு. குடும்பம், கல்வி முக்கியம். அதை மறந்து காதலில் விழுந்து குடும்பத்தை கஷ்டப்படுத்த கூடாது, பெற்றோர்களை அழ வைக்க கூடாது என்ற கருத்தை துணிச்சலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். காதல் என்றால் காதலர்களை சேர்த்து வைக்கணும். காதலை தெய்வீகமாக மதிக்கணும். எதிர்ப்புகளை மீறி காதலை கொண்டாடணும் என்ற வழக்கமான பாணியை துணிந்து மீறியிருக்கிறார்கள். அதற்கேற்ப, கிளைமாக்சில் சில சீன்களை நச்சென சேர்த்து இருக்கிறார். அது மட்டும்தான் படத்தில் ஈர்ப்பு.

பருந்து - உயர பறக்காத ஒரு காதல் கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !