ஏழு கடல் ஏழு மலை
தயாரிப்பு : வி ஹவுஸ் புர டக் ஷன்ஸ்
இயக்கம் : ராம்
நடிப்பு : நிவின்பாலி, சூரி, அஞ்சலி
ஒளிப்பதிவு : ஏகாம்பரம்
இசை : யுவன்சங்கர்ராஜா
வெளியான தேதி : அக்., 01, 2026
நேரம் : 2 மணிநேரம் 17 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5
எட்டு ஆண்டுகளுக்குபின் வெளிநாட்டில் இருந்து வரும் சூரி, சொந்த ஊருக்கு செல்ல தீபாவளி நாளில் ரயிலில் பயணம் செய்கிறார். பயணிகள் இல்லாத அந்த பெட்டியில் 8 ஆயிரம் ஆண்டுகளாக வாழும் நிவின்பாலியும் இருக்கிறார். ஒரு எலியும் இருக்கிறது. ரயில் பயணத்தில் நிவின்பாலிக்கும், சூரிக்கும் விவாதம், சண்டை வருகிறது. காரணம் அந்த எலி. நான் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன். ஒரு பெண்ணை தேடி வருகிறேன் என தனக்கும் அஞ்சலிக்குமான காதல் கதையை சொல்கிறார் நிவின்பாலி. அடிக்கடி சூரியும், அவரும் மோதிக் கொள்கிறார்கள். அந்த சண்டையில் சூரி என்ன ஆனார். எலிக்கு என்ன ஆனது. நிவின்பாலி அஞ்சலியை கண்டுபிடித்தாா? அந்த ரயில் பயணம் சொல்லும் தத்துவங்கள் என்னென்ன? இதுதான் ராம் இயக்கிய ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கரு.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இது வழக்கமான கதையும் அல்ல, வழக்கமான நடிப்பும் அல்ல, சொல்ல வரும் விஷயமும் வேறு என ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துவிடும். நிவின்பாலி கேரக்டர் துாய தமிழில் பேச, இது தமிழா என சூரி கேட்கிறார். படம் பார்க்கும் பலரும் அதை கேட்கலாம். அந்த அளவுக்கு இலக்கிய தமிழில் பேச ஆரம்பித்து, பிறகு வழக்கமான மொழி நடைக்கு வருகிறார். அவர் கேரக்டர் பின்னணியும் குழப்பமாக இருக்கிறது. 8 ஆயிரம் ஆண்டுகள் வாழ்கிறார். 3 காலகட்டங்களில் அஞ்சலியை காதலிக்கிறார் என அவரை பற்றி சொன்னாலும், உண்மையில் அவரது கதாபாத்திரத்தில் தெளிவு இல்லை. சூரியுடனான பேச்சுக்கு நடுவில் நிவின்பாலியின் முந்தைய ஜென்ம காதல் கதை விரிகிறது. திடீரென சூரியும், நிவின்பாலியும் கொலை வெறியுடன் மோதுகிறார்கள். பின்னர், சமாதானம் ஆகி மீண்டும் ரயிலில் உட்கார்ந்து பேசுகிறார்கள். அந்த முரணுக்கான அழுத்தம் இல்லை. நிவின்பாலியின் அசுரத்தனமான நடிப்பு, கேட்கும் கேள்விகள் ஓகே. சூரி சில இடங்களில் நடிப்பில் மனதில் நிற்கிறார். நிவின்பாலியுடன் சண்டை, தனது மகன் பற்றி அவர் பேசுவதும், இன்னொரு சிறுவனுக்காக அவர் உருகுவதும் அருமை.
இவர்களை தவிர, அஞ்சலி அவ்வப்போது வந்து போகிறார். அவர் சீன்களை கவிதை மாதிரி எடுத்து இருக்கிறார். அந்த கவிதையும் பலருக்கு புரியாது. பாடல் காட்சியில் கூட அஞ்சலியை சரியாக காண்பிக்கவில்லை. தவிர, ஒரு எலி படம் முழுக்க வருகிறது. அது சூரிக்கு இம்சை தருகிறது. அந்த எலி மூலமாக ஏதேதோ சொல்ல நினைக்கிறார் இயக்குனர், என்னன்னவோ வசனங்கள் பேசுகிறார். அதை புரிவதும் கஷ்டம்.
பெரும்பாலான காட்சி ரயிலில் நடக்கிறது. அதை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஏகாம்பரம். ராம் படங்களில் யுவன் சங்கர் ராஜா இசை தனித்துவமாக இருக்கும். இதில் அதுவும் மிஸ்சிங்.
படம் முழுக்க ரயில் பயணம், விவாதம், சண்டை, துரத்தல், சமாதானம், காடுகளில், கடல் புறத்தில் பிளாஷ்பேக் என திரைக்கதை ஒரு மாதிரி செல்கிறது. உண்மையில் இந்த கதையில் நடப்பது என்ன? இயக்குனர் என்ன சொல்ல வருகிறார். ஏன் இவ்வளவு குழப்பம். ஒருவேளை ராம் அளவுக்கு அதிகமாக சிந்தித்துவிட்டாரோ? அல்லது நமக்குதான் அவர் சொல்வது புரியலையே என படம் பார்க்கும் பல பேருக்கு சந்தேகம், கேள்விகள் வருவது நிச்சயம்.
ராம் படங்களில் ஒருவித புதுமை இருக்கும். அவர் பட சீன்களில் ஒருவித கருத்தாழம் இருக்கும், அவ்வளவு எளிதில் மறக்க முடியாத சீன்கள், அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் இருக்கும். அதெல்லாம் இதில் இல்லை. நிறைய கருத்துகளை, தத்துவங்களை, மனிதநேய சிந்தனைகளை, காதலை புதுமாதிரி சொல்ல நினைத்து இருக்கிறார் ராம். ஆனால், அது சராசரி சினிமா ரசிகர்களிடம் இருந்து ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருப்பதால், அதை உணர்ந்து ரசிக்க முடியாத நிலையில் அந்த எலி மாதிரி தத்தளிக்கிறது பார்ப்பவர்களின் மனம். கற்றது தமிழ், பேரன்பு, தங்கமீன்கள், பறந்துபோ இயக்குரின் படமா இது என பலமுறை கேள்வி கேட்க வைக்கும்.
ஏழு கடல், ஏழு மலை... குழப்பம்