உள்ளூர் செய்திகள்

கோந்தல்

தயாரிப்பு : தவாகர் பிலிம்ஸ்
இயக்கம் : சந்தோஷ் தவாகர்
நடிப்பு : யோகேஷ், இஷிதா, கிஷோர், நிஷாத், அஞ்சு பிரபு, சுரேஷ் , கைலாஷ்
ஒளிப்பதிவு : அமலேந்து சவுத்ரி
இசை : இளையராஜா
வெளியான தேதி : நவம்பர் 13 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 3 / 5

இந்தியா சார்பில் 2007ம் ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ளும் அதிகாரப்பூர்வமான படம் கோந்தல். இது ஒரு மராத்திய மொழி படம். கோந்தல் என்ற மராட்டிய நாட்டுப்புற நாடகம் கலந்த இசைக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மராத்திய மொழியில் 'கோந்தல்' என்றால் குழப்பம், கொந்தளிப்பு என்றும் அர்த்தம். கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது. திருமண நிகழ்ச்சியின்போது குலதெய்வங்களைப் போற்றும் வகையில் இந்த சடங்கு இரவு முழுக்க நடத்தப்படுகிறது. அதில் திருமண வீட்டார், கிராம மக்கள் கலந்து கொள்கிறார்கள். ஏராளமான கலைஞர்கள் குல தெய்வம் கதையை , வீரத்தை அதில் சொல்லி ஆடிப்பாடுவார்கள். இந்த படத்தின் கதையும் யோகேஷ், இஷிதா திருமணத்தன்று இரவில் நடக்கும் கோந்தல் சடங்கை மையப்படுத்தியது. இரவில் தொடங்கி மறுநாள் காலையில் படம் முடிகிறது. சரி, இந்த படம் ஏன் தமிழில் டப்பாகி வெளியாகி உள்ளது என்றால், படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா.

1970களில் கதை நடக்கிறது. மகாராஷ்டிரா மாநில கிராமத்தில் ஊரில் கொஞ்சம் செல்வாக்காக இருக்கும் குடும்பத்தை சேர்ந்த யோகேசுக்கும், வசதி இல்லாத இஷிதாவுக்கும் திருமணம் நடக்கிறது. அன்று இரவு கோந்தல் சடங்கு தொடங்குகிறது. அந்த ஊர் அடாவடி தலைவரான சுரேஷ் மகனும், தலைவர் ஆக ஆசைப்படும் நிஷாத்துக்கு மணப்பெண் மீது ஒரு கண். எப்படியாவது அவரை அடைய நினைக்கிறார். கொஞ்சம் துடிப்பான குணமுள்ள மணப்பெண் இஷிதா, என் கணவரை கொன்றுவிட்டு, என்னை அடை என்கிறார். இதற்கிடையில், இஷிதாவின் காதலன் அஞ்சு பிரபு, அவரை அங்கிருந்து அழைத்து செல்ல அந்த கூத்தில் முக்கியமான கலைஞராக ஆடுகிறார். ஊர் தலைவரான சுரேஷ் அந்த கூத்தில் தனது அதிகாரத்தை காண்பிக்கிறார். இவர்களுக்கு இடையில் அப்பாவியான மணமகன் தவிக்கிறார். ஊர் தலைவரால் பாதிக்கப்பட்ட பெரியவர் ஒருவரும் பழிவாங்க காத்திருக்கிறார். அந்த ஒரு இரவில் என்ன நடந்தது? யார் பலி ஆனார்கள். மணமக்களுக்கு என்ன ஆனது என்பது கோந்தல் படத்தின் கதை.

இது வழக்கமான படம் இல்லை என்பதை முதல் 25 நிமிடங்களில் சொல்லாமல் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும். ஆம், முதல் ஷாட்டை சிங்கிளாக எடுத்து இருக்கிறார்கள். அதாவது, முதல் 25 நிமிடம் அந்த திருமண வீடு, கிராமம், மணமகள், மணமகன் என்ட்ரி, மாமியார், மணமகள் பெற்றோர்கள் மனநிலை, கூத்துக்கு தயார் ஆனது, மணமகளின் கோபம் என அனைத்தையும் அந்த 25 நிமிடங்களில் கேமராவை எங்கும் நிறுத்தாமல், கட் பண்ணாமல் ஒரே ஷாட் ஆக எடுத்து சாதனை படைத்து இருக்கிறார்கள். அந்த ஷாட் முடிந்தவுடன் தியேட்டரில் அப்படியொரு கைதட்டல். அந்த ஒரே ஷாட்டிலேயே கதை புரிந்துவிடுகிறது. அடுத்து மணமகளின் திட்டம், எதிர் தரப்பின் சூழ்ச்சி விவரிக்கப்படுகிறது.

மணமகனாக வரும் யோகேஷ் அப்பாவி இளைஞராக இருக்கிறார். அவரை மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள். திருமணத்தன்று அனைவரிடம் வலியபோய் பேசி ஆசீர்வாதம் வாங்குகிறார். தனது மனைவி அழகானவர் என்பதில் பெருமை கொள்கிறார். கோந்தல் சடங்கில் பங்கு பெறுகிறார். மனைவியின் திட்டப்படி அவர் கொல்லப்பட்டாரா என்பது கிளைமாக்ஸ். முதலில் அப்பாவி, கிளைமாக்சில் இன்னொரு முகம் என அவர் மனதில் நிற்கிறார்.

முழுக்கதையும் சுமன் என்ற மணப்பெண் இஷிதாவை சுற்றி நடக்கிறது. மராத்திய திருமணபெண் உடையில் படம் முழுக்க இருக்கிறார். தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என பெற்றோர்களுடன் சண்டை போடுகிறார். தன்னை அடைய விரும்பும் ஊர் தலைவர் மகனை உசுப்பேற்றுகிறார். தனது காதலனை கூத்தில் பார்த்து சந்தோஷப்பட்டு, வீட்டை விட்டு ஓட அவனுக்கு சில ஐடியா கொடுக்கிறார். இஷிதாவின் அந்த பாரம்பரிய உடை கெட்அப், துள்ளலான நடிப்பு, அவரின் திட்டங்கள் கதைக்கு உயிர் கொடுக்கின்றன. கிளைமாக்சில் சில திருப்பங்கள் நடக்க , அவர் முகம் மாறுவது செம.

ஊர் பெரியவராக வருபவர் கோந்தல் சடங்கை முன்னின்று நடத்துகிறார். அவர் கேரக்டர் அவ்வளவு அழுத்தமானது, அவர் பேரனாக வருபவனும் ஊர் தலைவர் மீது கடும் கோபத்தில் சில விஷயங்களை செய்கிறார். கடைசியில் அவர் செய்யும் ஒரு விஷயம் யாரும் எதிர்பாராதது. ஊர் தலைவராக வரும் கேரக்டர், அவர் பேசும் ஆதிக்க மனநிலை டயலாக் , அவரின் அகம்பாவம் நம்மை கோபப்படுத்துகிறது. மைனர் மாதிரி இருக்கும் அவர் மகன் நிஷாத் நடிப்பு, மணமகளை அடைய போடும் திட்டங்கள் விறுவிறுப்பு இவர்களை தவிர, கோந்தல் கூத்து நடத்தும் கலைஞர்கள், அதில் காமெடி செய்பவர், அந்த கூத்து நாயகனாக வருபவர், கிராம மக்கள், மணமகளின் மாமியார், மாமனார், மணமகன் அக்கா, பந்தா செய்யும் அவர் கணவர் என ஏகப்பட்ட கேரக்டர்கள். அனைவரையும் நடிக்க வைத்து கதையை கலகலப்பாக்கி இருக்கிறார் இயக்குனர்

கொஞ்சம் சீரியஸ் கதை மாதிரி முதலில் தோன்றினாலும், அடுத்து வரும் காட்சிகளில் படத்தை கமர்ஷியல் ஆக்கியிருக்கிறார்கள். நட்பு, காதல், நயவஞ்சகம், வில்லத்தனம், கடவுள் நம்பிக்கை என அனைத்தும் படத்தில் இருக்கிறது. தமிழில் டப்பாகி இருந்தாலும் அந்த ஸ்லாங் சரியாக செட் ஆகவில்லை. கிராமத்து புற ஸ்லாங் என நினைத்து கொஞ்சம் குழப்பி இருக்கிறார்கள். அதை சரிசெய்து இருக்கலாம்.

படத்தில் இயக்குனர், நடிகர்கள் ஒரு பக்கம் கலக்கினால், இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளர் அமலேந்து சவுத்ரி தனது திறமையால் மிரட்டியிருக்கிறார். கிராமத்தில் இரவில் நடக்கும் கதை, வீட்டுக்கு வெளியே பெரிய திடலில் கூத்து, ஏகப்பட்ட மக்கள், மின்சார வசதி இல்லாத காலம், அதை உணர்ந்து அருமையான லைட்டிங் கொடுத்து ஒளிப்பதிவில் அந்த மனநிலையை கொண்டு வந்து இருக்கிறார். அடுத்து இளையராஜாவின் இசை, பாடல்கள் கதைக்கு பலம். படம் முழுக்க கூத்து நடந்துகொண்டே இருக்கிறது. அதில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கேலி பேசுகிறார்கள், கடவுளை அழைக்கிறார்கள். அதற்கேற்ப, அந்த கால கட்டம், அந்த மொழிகள், மக்களுக்கு ஏற்ப இசையை வழங்கி 'மராட்டி படத்திலும் என்னால் முத்திரை பதிக்க முடியும்' என நிரூபித்து இருக்கிறார்

இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. அதில் அந்த மக்களின் வாழ்வியல், அடிமை வாழ்க்கை, சில மனிதர்களின் நல்ல, கெட்ட குணங்கள், சூழ்ச்சி, குடும்ப பிரச்னைகள், உளவியல் , அந்த கூத்தின் தன்மை என பல விஷயங்களை சொல்லாமல் சொல்லி, 1970களில் இருக்கும் ஒரு மராட்டிய கிராமத்துக்கு, அந்த சடங்கை பார்க்க அழைத்து செல்கிறார் இயக்குனர். கடைசியில் இப்படிப்பட்ட நாட்டுப்புற கலைகள் குலதெய்வம் பெருமையை சொல்பவவை, இவை நடத்தப்பட்டால் தெய்வ அருள் கிடைக்கும், தீமைகள் விலகி, கெட்டவர்கள் அழிந்து அந்த குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்பதையும் சொல்லி, கடவுள் நம்பிக்கையையும் மனதில் விதைக்கிறார் இயக்குனர். கோந்தல் படம் பார்த்தால் அந்த கிராமம், அந்த மக்கள், அந்த கலையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

கோந்தல் - மராட்டிய மொழியில் வந்த காந்தாரா!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !