ஜான் டோ
தயாரிப்பு: பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா
இயக்கம்: மதுமிதா
நடிப்பு: அர்ஜூன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஜாரா, ஸ்ரிஷ்டி, நீரவ், அனுபமா, ஜெயபிரகாஷ்
ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன்
இசை: முஜீப் மஜீத்
வெளியான தேதி: நவம்பர் 13, 2026
நேரம்: 2 மணி 29 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5
கேரளாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அர்ஜூன் தாஸ் இருக்கும் ஸ்டேஷன் லிமிட்டில் ஒரு சிறுவன் ஏரிக்குள் காருக்குள் அடைக்கப்பட்டு கொல்லப்படுகிறான். தமிழகத்தில் சஞ்சனா நடராஜன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்டேஷன் லிமிட்டில் ஒரு சிறுவன் காணாமல் போகிறான். இந்த வழக்கை இருவரும் தனித்தனியாக விசாரிக்கிறார்கள். இரண்டிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதால், இரண்டு ஸ்டேஷன்களும் மாநில பார்டரில் இருப்பதால் ஒரு கட்டத்தில் தமிழகம் வந்து சஞ்சனாவுடன் இணைந்து வழக்கை விசாரிக்கிறார் அர்ஜூன் தாஸ். அப்போது பல அதிர்ச்சி உண்மைகள் தெரிய வருகின்றன. அது என்ன? இந்த கொலைகளை செய்வது யார்? ஏன்? அதை இருவரும் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது ஜான் டோ படத்தின் கதை. இந்த தலைப்புக்கு மருத்துவரீதியில் அடையாளம் தெரியாத பிணம் என அர்த்தம்.
துபாயில் இருந்து தமிழக - கேரள எல்லையான குறிஞ்சிமேடு என்ற மலைவாழ் ஏரியாவுக்கு வசிக்க வருகிறார்கள் ஸ்ரிஷ்டியும், அவருடைய மகன் நீரவ், மகள் ஜாரா ஆகியோர். திடீரென சிறுவன் நீரவ் காணாமல் போக, அந்த வழக்கை சஞ்சனா நடராஜன் விசாரிக்கிறார். மறுபக்கம் காருக்குள் அடைக்கப்பட்ட ஏரியில் கொல்லப்பட்ட சிறுவன் வழக்கை அர்ஜூன்தாஸ் விசாரிக்கிறார். அதிலிருந்து கதை திரில்லர் மோடுக்கு மாறுகிறது. அந்த சிறுவர்களுக்கு என்ன ஆனது. அவரா? இவரா? என விசாரணைகள் சூடுபிடிக்கிறது.
தவிர, ஸ்ரிஷ்டியின் குடும்ப பிரச்னைகள், ஜாராவின் முன்கோபம், அவர் பின்னணி, அர்ஜூன்தாஸின் மனப்பிரச்னை, அவருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல், மீண்டும் விசாரணை என படம் போய்க்கொண்டே இருக்க, கிளைமாக்சுக்கு சற்றே நேரத்துக்கு முன்னால் வேறு சில கிளைக்கதைகள் வந்து சேர, படம் நகர்ந்து, நகர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிப்பதுடன் முடிகிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்பதால் படம் முழுக்க விசாரணை, துரத்தல், சந்தேகம் என செல்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அர்ஜூன்தாஸ்க்கு செட்டாகி இருக்கிறது. அவரின் அப்பா டார்ச்சர், பிளாஷ்பேக், அதனால் ஏற்பட்ட மனப்பிரச்னை, காதுக்குள் பேசும் அப்பா குரல், வழக்கு மீதான ஆர்வம் என கேரக்டர் பக்கா. என்ன ஒரே ஆக் ஷன் காட்சி மட்டுமே அவருக்கு இருப்பது ஏமாற்றம். குழந்தை சம்பந்தப்பட்ட வழக்கை அவர் விசாரிக்கும் விதம், அவருக்கு ஏற்படும் சந்தேகம், கிளைமாக்சில் கொலையாளியை கண்டறிவது கதைக்கு பிளஸ் ஆன இடங்கள், சிறுவன் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் சஞ்சனா நடராஜினின் தெனாவெட்டான நடிப்பு, கோபம், அவர் கேட்கும் அதிரடி கேள்விகள் அவரை பாராட்ட வைக்கிறது. அவருக்கும் அர்ஜூன்தாஸ் இடையேயான காதல் மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகரித்து இருக்கலாம்
காணாமல் சிறுவனாக வரும் நீரவ் நடிப்பு, முகத்தில் காண்பிக்கும் பயம், அவன் அம்மாவாக வரும் ஸ்ரிஷ்டியின் பதட்டம், குழப்பம் இதெல்லாம் மிக நேர்த்தியாக காண்பிக்கப்படுகிறது. விஜே அர்ச்சனா பிளாஷ்பேக் சீனில் சில நிமிடங்களில் வந்து காணாமல் போகிறார். அவர் மகள் ஜாரா, காணாமல் போன சிறுவன் அக்காவாக வருகிறார். அவரின் கெட்அப், அந்த திமிர்தனமான பாடி லாங்குவேஜ், அவரின் கோபம், கடைசியில் தவிப்பது ஆகியவை அவரை சிறந்த நடிகை என உணர வைக்கிறது. இவர்களை தவிர, கேரள போலீஸ், தமிழக போலீஸ், சந்தேகப்படும் சில நபர்கள் என படம் முழுக்க நிறைய கேரக்டர்கள்.
இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் சம்பந்தம் இல்லாத அல்லது சந்தேகம் வராத அளவுக்கு முதலில் வருபவர்களை கொலையாளிகளாக காண்பிப்பது சினிமா வழக்கம். இதிலும் அப்படியே. இவரா அவர்? என சந்தேகம் கடைசியில் வருகிறது. கேரள எல்லையில் கதை நடப்பதால் ஏரி, காடு, வீடு என அனைத்தையும் அழகாக காண்பித்து இருக்கிறது ப்ரீதா கேமரா. குறிப்பாக, அண்டர்வாட்டர் சீன்களில் அவர் வொர்க் அபாரம். முஜீப் மஜித் இசை அந்த திரில்லர் மூடு கொடுக்கிறது.
ஆனால் படத்தின் மைனஸ் விசாரணை காட்சிகள். அதை இவ்வளவு விரிவாக காண்பித்திருக்க வேண்டாம். அது போரடிக்கிறது. சில ஆங்கில வார்த்தைகள், சம்பந்தம் இல்லாத சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற பின்னணி, கதைக்கு தேவையில்லாத நபர்களின் சீன்கள் ஆகியவை கதை வேகத்தை தடுக்கிறது.
ஒரு சிறுவன் காணாமல் போகிறான். கடைசியில் அந்த எண்ணிக்கை கூடுகிறது. அவர்களுக்கு என்ன ஆனது என்பதை ஒரு பிளாஷ்பேக் மூலமாக சொல்கிறார் இயக்குனர். அதில் கொஞ்சம் தெளிவு இல்லை அல்லது அழுத்தம் இல்லை. இந்த விஷயத்துக்காக இப்படி நடக்குமா என்ற கேள்வி வருகிறது. ஏஞ்சல், கேப்ரியல், ஊசி, மனநிலை பாதிப்பு, திருப்பங்கள் என கதையில் பல உருப்படியான சீன்கள் இருந்தாலும், ஏனோ கொலையாளியை, அந்த பின்னணியை ரொம்ப சாப்டாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.
கொலையாளி சொல்லும் காரணம், அவர் செய்யும் செயல்களில் வீரியம் இல்லை அல்லது பார்வையாளர்களை உலுக்கவில்லை. சைக்கோ கொலையாளி அல்லது பாசக்கொலையாளியாக காண்பிக்கப்படுபவரை பார்த்தால் கோபம் வரணும், வெறுப்பு வரணும். அது கிளைமாக்சில் மிஸ்ஸிங். ஹீரோ, வில்லன் சண்டையும் இல்லாமல், சேசிங், விறுவிறுப்பு இல்லாமல் சப்பென படம் முடிகிறது. கொலைக்கு சொல்லப்படும் காரணமும் அழுத்தமாக இல்லை. அதை வேறு கோணத்தில், இன்னும் கொடூர பின்னணியாக சொல்லியிருக்கலாம்.
ஜான் டோ - திரில்லர் விரும்பிகளுக்கு மட்டும் கொஞ்சம் பிடிக்கும்