லெனின் பாண்டியன்
தயாரிப்பு : சத்யஜோதிபிலிம்ஸ்
இயக்கம் : டி.டி.பாலசந்திரன்
நடிப்பு : கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஜார்ஜ் மரியான், அர்ச்சனா, போஸ் வெங்கட்,
ஒளிப்பதிவு : எட்வின்
இசை : இளையராஜா
வெளியான தேதி : செப் 25, 2026
நேரம் : 2 மணிநேரம் 21 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
மானாமதுரை அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி கங்கை அமரனின் ஆட்டை, மணல் கடத்தும் போது லாரி ஏற்றி கொன்றுவிடுகிறது வில்லன் யுகேந்திரன் கும்பல். ஆட்டுக்கு நீதி கேட்டு போலீசில் புகார் கொடுக்கிறார் கங்கை அமரன். மணல் மாபியாவுக்கு ஆதரவாக செயல்படும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், வயதானவர் என்றும் பார்க்காமல் கங்கை அமரனை அடித்து அவமானப்படுத்துகிறார். மணல் திருட்டை தடுக்கும் விஏஓ அர்ச்சனாவையும் யுகேந்திரன் டீம் கொடூரமாக கொல்கிறது. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வர, நேர்மையான நீதிபதி ஜார்ஜ் மரியான் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார். அதன்படி, கங்கை அமரனுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக வருகிறார் புதுமுக ஹீரோ தர்ஷன். அவரை மீறி கங்கை அமரனை எதிர் கும்பல் கொன்றதா? குடும்ப பிரச்னைகளில் தவிக்கும் தர்ஷனுக்கு கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் உதவினார்களா? இது தான் லெனின் பாண்டியன் கதை. டி.டி.பாலசந்திரன் இயக்க, இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.
நீண்ட காலத்துக்குபின் இளையராஜா இசையில் அருமையான கிராமத்து கதை. வயதாகிவிட்டாலும் கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் ஒருவர் மீது வைத்திருக்கும் பாசம், அக்கறை ஆச்சரியப்பட வைக்கிறது. குழந்தை இல்லாத இவர்கள் ஒரு ஆட்டை குழந்தையாக நினைத்து வளர்க்க, அதை மணல் லாரி கும்பல் கொல்ல, கதை சூடுபிடிக்கிறது.
இன்னொரு பக்கம் போலீசாக இருந்தாலும் அடிமட்ட நிலையில் இருப்பதால் ஸ்டேஷனில் பலரால் அவமானப்படுத்தப்படுகிறார் தர்ஷன். அந்த வேலை வேணாம் என நினைக்கும்போது கோர்ட் உத்தரவுப்படி, கங்கை அமரன் பாதுகாவலர் ஆகிறார். அவருக்கும் மனைவியுடன் பிரச்னை, மனைவிக்கு ஒரு ஆபரேசன் பிரச்னை. நிறைய பணத்தேவை. இந்த சூழ்நிலை தர்ஷனை வில்லன் கும்பல் விலை பேச என்ன நடக்கிறது என்ற ரீதியிலும் இன்னொரு பக்கம் கதை செல்கிறது.
கங்கை அமரன், தர்ஷன் ஆகிய இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். இரண்டு பேருமே அந்த கேரக்டராக மாறி நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக, கங்கை அமரன் ஆடு மீது வைக்கும் பாசம், அதை இறந்தவுடன் அழுவது, போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்பட்டு, அடி வாங்குவது என பல இடங்களில் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார். கோர்ட்டில் அவர் கேட்கும் கேள்விகள் செம. மனைவி ரோஜா மீதான பாச காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். ஆங்காங்கே கொஞ்சம் மிகை நடிப்பு இருந்தாலும் நடிகராகவும் முத்திரை பதித்து இருக்கிறார் கங்கை அமரன்.
சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் அறிமுகமாகியுள்ள படம். முதல் படம் என்றாலும் ஓவர் பில்டப், ஹீரோயிசம் இல்லாமல் அந்த கேரக்டர் தன்மை உணர்ந்து நடித்து இருக்கிறார். தன்னை ஸ்டேஷனில் கிண்டல் செய்யும்போது வரும் கோபம், மனைவியுடன் சண்டை, கங்கை அமரனை கொல்ல வரும் எதிரிகளிடம் மல்லுக்கட்டு, கடைசியில் பணத்துக்காக தவிக்கும் இடங்கள் என பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கிளைமாக்சில் தனது நிலை உணர்ந்து அவர் துடிப்பதும் நல்ல சீன். குடும்ப பெயரை காப்பாற்றி இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குபின் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் ரோஜா. கங்கை அமரனை வயது வித்தியாசத்துடன் அவர் திருமணம் செய்வதாக கதை சொல்லியிருக்கிறார்கள். அவரின் இயல்பான நடிப்பும், கணவருக்காக அவர் கேட்ட சமையல் செய்து காத்திருப்பதும், அவருக்கு அட்வைஸ் செய்வதும் டச்சிங். இவர்களை தவிர நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியான் மனதில் நிற்கிறார். தனது உருவ அமைப்பு குறித்து, டவாலியிடம் பேசும் இடங்கள், சரியான தீர்ப்பு அளித்து வில்லன் கும்பலை, போலீலை நிலை தடுமாற வைக்கும் இடங்கள் அப்ளாஸ்.
சின்ன கேரக்டரில் வந்தாலும் நேர்மையான அரசு ‛விஏஓ' வந்து கொடூரமாக சாகிறார் அர்ச்சனா. அந்த கேரக்டர், மணல் கொள்ளையை தடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பலருக்கு சாட்டையடி. ஹீரோ மனைவியாக வரும் ஷ்ரித்தா ராவ்வும் ஒரு கோபக்கார மதுரை பெண்ணாக அமர்களப்படுத்தி இருக்கிறார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன் வில்லன் கே ரக்டர் பல படங்களில் நாம் பார்த்தது. பார்த்தாலே நாம் கோபப்படும் அளவுக்கு, கல்நெஞ்சு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் போஸ் வெங்கட்.
நடிகர்கள் ஒரு பக்கம் என்றால், இவர்களுக்கு இணையாக தனது பின்னணி இசை, பாடல்களால் இன்னொரு ஹீரோவாக இருக்கிறார் இளையராஜா. கோர்ட் காட்சி, கங்கை அமரன், ரோஜா பாசக்காட்சி, கிளைமாக்சில் நான் ராஜா என பின்னணி இசை மூலம் சொல்லாமல் சொல்கிறார். சில இடங்களில் முதல் மரியாதை பூங்காற்று திரும்புமா பின்னணி இசை வருகிறது. அந்த இடங்கள் இடம் மனதை லேசாக்குகிறது. பாண்டி முனி பாடலில் ஆக்ரோசத்தை காண்பித்து இருக்கிறார். எட்வின் ஒளிப்பதிவு கிராமம், மணல் கடத்தல், கோர்ட் காட்சிகளை இயல்பாக காண்பிக்கிறது.
மணல் கடத்தல், விவசாயிகளின் வறுமை, கிராமப்புற மக்களின் வாழ்வியல், போலீஸ் துறையின் அத்துமீறல், நீதித்துறையின் மாண்பு என பல விஷயங்களை படம் முழுக்க காட்சிகள் மூலம் சொல்லாமல் சொல்லி, ஒரு அழுத்தமான படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர். எளிய மனிதர்கள், நேர்மையானவர்கள் படும் பாடு, சமூகம் அவர்களை பார்க்கும் விதத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.அதை வழக்கமான கதையாக சொல்லாமல் ஒரு வயதான தம்பதி, ஒரு பவர் இல்லாத போலீஸ்காரர் என திரைக்கதை அமைத்ததும், இளையராஜாவை படத்திற்குள் கொண்டு வந்ததும் புத்திசாலிதனம். சட்டம் அனைவருக்கும் சமம். அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தும், மணல் கொள்ளைக்கு எதிரான கோபமும் வரவேற்க தாக்கது. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் இருக்கிறது. அதை இன்னும் இயல்பாக காண்பித்து இருக்கலாம். சில இடங்களில் பிரச்சார நெடி இருக்கிறது. கிளைமாக்ஸ் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்து இருக்கலாம். ஆனாலும் மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசத்தை கிராமத்து பின்னணியில் உணர்வுபூர்வமாக சொல்லும் கதை, நடிப்பு, இசையால் மனதில் நிற்கிறது.
லெனின் பாண்டியன் - பீல் குட் மூவி