அன்பில் அவன்
தயாரிப்பு: ஹேப்பி ஹே பிக்சர்ஸ்
இயக்கம்: ஆர். கார்த்திகேயன்
நடிப்பு: அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சாபு, மகா, கதிர்பாலு
ஒளிப்பதிவு: கவுதம் ராஜேந்திரன்
இசை: கோவிந்த் வசந்தா
வெளியான தேதி: அக்டோபர் 2, 2026
நேரம்: 2 மணி 37 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வனும், பிரீத்தி முகுந்தனும் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறார்கள். அங்கே ஏகப்பட்ட பிரஷர், அவமானங்கள். அதனால் ஒரு மலைவாழ் பிரதேசத்தில் சொந்தமாக ஹோம் ஸ்டே ஓட்டல் தொடங்க ஆசைப்படுகிறார்கள். கடன் வாங்கி, கையில் இருப்பதை விற்று, ஒரு இடத்தை கஷ்டப்பட்டு வாங்கி, அந்த ஓட்டலை தொடங்கும் வேலைகளை கவனிக்கிறார்கள். லோக்கல் எம்எல்ஏ, அவர் ஆதரவாளரான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு வக்கீல் ஆகியோரால் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை. திட்டமிட்டபடி ஓட்டல் திறக்க முடியாத நிலை.
அது ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை அடிதடி, வன்முறை என செல்கிறது. தடைகளை மீறி இந்த ஜோடி ஓட்டல் தொடங்கினார்களா? பிரச்னைகளை எப்படி சமாளித்தார்கள்? இழந்தது என்ன? என்பது 'அன்பில் அவன்' படக்கதை. ஆர். கார்த்திகேயன் இயக்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு காதல் தம்பதிகளின் கதை, அவர்களின் தனிப்பட்ட, குடும்ப கஷ்டம், அன்பு, கனவு என தொடங்கும் படம், அவர்கள் ஓட்டல் ஆரம்பிக்க முயற்சிக்கும்போது வேறு ஜானருக்கு செல்கிறது. இடைவேளைக்குபின் வில்லன்கள், சண்டை என ஆக்ஷனுக்கு மாறுகிறது. இடையில் பிளாஷ்பேக்கில் கியூட்டான லவ்ஸ்டோரியும் வருகிறது. இப்படி ஒரு அழகான கலவையாக படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன். நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும்போது வேலை பிரஷரால் கஷ்டப்படுகிறார் அசோக் செல்வன்.
அசோக்செல்வன், அதே ஓட்டலில் வேலை பார்க்கும் மனைவியின் கஷ்டங்களை பார்த்தும் பீல் பண்ணுகிறார். அந்த இடங்கள் அவ்வளவு எதார்த்தம். ஹோம்ஸ்டே ஓட்டல் கனவு, அதற்கான முயற்சி, தடைகள், பிரச்னைகள், சண்டை என அடுத்தடுத்து அவர் வாழ்க்கை மாறுகிறது. அதற்கு ஏற்பவும் இருவரின் நடிப்பு ஓகே. குறிப்பாக, ஓட்டல் பர்மிஷன் வாங்க தடைகள் ஏற்படும்போது, போலீஸ், அரசியல்வாதி, வில்லன் ஆட்களால் பிரச்னைகள் வரும்போது அவர் துடிப்பது கதைக்கு பிளஸ்.
என்ன இடைவேளைக்குபின் ஒரே இடத்தில், அந்த ஓட்டலில் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதும் நுாற்றுக்கணக்கான ஆட்களை ஹீரோ அடித்துக்கொண்டே இருப்பது போரடிக்கிறது. காதல், மனைவியுடனான காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கும் ஹீரோ, சில சீன்களில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரசனை கொடுப்பது மைனஸ். ஆனால் ஆக்ஷனில் முத்திரை பதித்து இருக்கிறார்.
பிரீத்தி முகுந்தனுக்கு நல்ல பெயரை கொடுக்கும் படம். மற்ற படங்களை விட, அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பு. ஓட்டலில் அதிகாரிகளால் அவமானப்படுவது, சபலிஸ்ட் போலீஸ் பிடியில் தவிப்பது, ஓட்டலுக்கு எதிராக தடைகள் வரும்போது பொங்குவது என பல இடங்களில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு அசோக்செல்வனுடன் ஒரு எமோஷன் காட்சியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் வழக்கம்போல் அழகு. என்ன, இடைவேளைக்குபின் ஆக் ஷன் அதிகமாகும்போது அவர் நடிப்பும் காணாமல் போகிறது.
அந்த ஓட்டல் இடத்தை கொடுக்கும் ராணியாக வருகிறார் ரேவதி. சில சீன்களில் காணாமல் போகிறார். கடைசியில் அவர் வருகை சர்ப்பிரைஸ் ஆக இருக்கும், மீண்டும் ஏதாவது செய்வார் என நினைத்தால் வரவே இல்லை. அந்த கேரக்டரை மீண்டும் பயன்படுத்தியிருக்க வேண்டாமா இயக்குனரே. அரசியல்வாதியாக, எம்எல்ஏ.,வாக வரும் கதிர்பாலு நடிப்பில் அவ்வளவு வில்லத்தனம். வக்கீலாக வரும் சாபும் தன்பங்கிற்கு மிரட்டுகிறார். மறை ந்த டில்லி கணேஷ் மகன் மகாவுக்கு சபலம் நிறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர். அவருக்கும், ஹீரோயினுக்குமான சீன்கள் பரபர.
சென்னை, ஊட்டி மாதிரியான ஒரு இடம் என இரண்டிலும் கதை நடக்கிறது. இரண்டையும் கச்சிதமாக காண்பித்து இருக்கிறது கவுதம் ஒளிப்பதிவு. இடைவேளைக்குபின் நடக்கும் ஆக்ஷன் பிளாக் அருமை. காதல் காட்சிகளில், பின்னணி இசையில், பாடல்களில் நல்லபீலிங்கை தருகிறது கோவிந்த்வசந்தா இசை. காதல் மாதிரி தொடங்கி ஆக்ஷனில் முடியும் கதை. ஆனாலும், முதற்பாதியில் இருக்கிற விறுவிறுப்பு, திருப்பங்கள் பிற்பாதியில் இல்லை. அந்த மிக நீளமான ஆக்ஷன் பிளாக்கை பாதிக்கும் குறைவாக காண்பித்து இருக்கலாம்.
வீட்டில் இருக்கும் இரண்டு பேர் ஏகப்பட்ட வில்லன் ஆட்களை அடிப்பதை, அடிவாங்குவதை ஏற்க முடியவில்லை. எப்படா ஓட்டலை திறப்பீங்க, இந்த சண்டை முடியும் என ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் கேட்க ஆரம்பித்துவிடுகிறார். ஓட்டல் பிரச்னை, சண்டையை என இரண்டையும் மட்டுமே மீண்டும், மீண்டும் கதை சுற்றி வருவது திரைக்கதை பலவீனம்.
காதலை, இளம் தம்பதிகளின் அன்பை சொன்ன விதத்தில் அன்பில் அவன் ஓகே. ஆனால், அடுத்த பாதியில் எதார்த்ததை மீறி கெட்ட அரசியல்வாதி, மோசமான அரசு அலுவலங்கள், தவறான போலீஸ் என வழக்கமான சினிமாவுக்கு கதை செல்கிறது. தவிர, இரண்டாம் பாதி ஓவர் டோஸ் ஆக் ஷன் காட்சிகளால் கதையும் தடுமாறியிருக்கிறது.
அன்பில் அவன் - அன்பும் ஆக்ஷனும் கலந்த இளம் தம்பதியினரின் கனவு கதை