உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தி டார்க் ஹெவன்

தி டார்க் ஹெவன்

தயாரிப்பு : கோதை என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : எஸ்.பாலாஜி
நடிப்பு : சித்து, தர்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி, பிரதீப்
ஒளிப்பதிவு : மணிகண்டன்
இசை : சக்தி பாலாஜி
வெளியான தேதி : செப் 18, 2026
நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங்: 2.75 / 5

தமிழக, கேரள எல்லையில் இருக்கும் மேக்கரை கிராமத்தில் ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்குபின் வரும் ஜூன் மாதத்தில் மர்மங்கள் நடக்கின்றன. அந்த மாதம் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். முற்காலத்தில் ஒருவரால் வஞ்சிக்கப்பட்ட வன தேவதையின் சாபம் இது என்று மக்கள் நம்புகிறார்கள். வெள்ளைக்காரன் ஒருவன் எழுதிய தி டார்க் ஹெவன் என்ற புத்தகமும் முன்கூட்டிய பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வரும் சித்து அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் பற்றி விசாரிக்கிறார். அப்போது அவர் மனைவியும் மர்மமான முறையில் இறக்க, இன்னும் தீவிரமாக விசாரிக்கிறார். 5 கொலைகளை செய்தது? சைக்கோவா? வனதேவதையா? பேயா? வேறு யாருமா? என்ன காரணம்? என்பதை அவர் கண்டுபிடிப்பதே தி டார்க்ஹெவன் கதை.

சின்னத்திரையில் பிரபலமான சித்து, இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். மர்மங்கள், அனுமாஷ்யங்கள் நிறைந்த கிராமத்தில் நடக்கும் கொலைகளை அவர் கண்டுபிடிக்கிற காட்சிகள். பல கேள்விகள் கேட்டு, சந்தேகப்பட்டு, அந்த கொலையாளியை நெருங்கும் இடங்கள். கிளைமாக்சில் நடக்கும் திருப்பம், சண்டை காட்சிகளில் ஹீரோவாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். பல இடங்களில் முகத்தை இறுக்கமாக வைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பிக்பாஸ் ரித்விகாவுக்கு ஒரு மாறுபட்ட வேடம். அவரின் பின்னணி, அந்த கேரக்டர் வேறு மாதிரி மாறும் இடங்கள் நல்ல விறுவிறுப்பு, நாட்டாமையாக
வேல.ராமூர்த்தி, டாக்டராக நிழல்கள் ரவி, போலீசாக ஜெயகுமார் தங்களுக்கு கொடுத்த வேலையை அளவாக செய்து இருக்கிறார்கள். சித்துக்கு உதவும் போலீஸ்காரரான பிரதீப் யாருப்பா இது என கேட்க வைக்கிறார் இடைவேளைக்குபின் அவரிடம் வரும் மாற்றமும் பரபர.

அடுத்தடுத்த நடக்கு கொலை, சைக்கோ கொலையாளி, வனதேவதை, வெள்ளைக்காரன் கதை என திரைக்கதையில் நிறைய விஷயங்களை சொல்லிவிட்டு, தி டார்க் ஹெவன் புத்தகம் வயலின், சாபம் என இன்னொரு பக்கமும் உழைத்துவிட்டு, கொலையாளி விஷயத்தில் புதுமை செய்து இருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குபின் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணியிருந்தால் படம் இன்னும் பெரியளவில் பேசப்பட்டு இருக்கும். சில விஷயங்களில் சின்ன குழப்பம் இருக்கிறது. ஆனாலும், இரவு நேர திரில்லர் காட்சிகளை கச்சிதமாக படமாக்கி மணிகண்டன் கேமரா, கதைக்கு ஏற்ற சக்தி பாலாஜி இசை, பல நடிகர்களின் இயல்பான கேரக்டர் ஆகியவை படத்தை இன்னும் மெருகூட்டி இருக்கிறது.

ஒரு வித்தியாச முகமூடி போட்டு கொலை செய்யும் பாணி, அமானுஷ்யம், சாபம், முன்கதை, அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் ஆகியவை திரில்லர் படத்துக்கான நல்ல மூடு கொடுத்து, பார்வையாளர்களை கட்டி போடுகிறது. ஆஹோ, ஓஹோ பில்டப், பிரமாதம் இல்லை என்றாலும் சின்ன பட்ஜெட்டில் நேர்த்தியான ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

தி டார்க் ஹெவன் - சஸ்பென்ஸ், திரில்லர் விரும்பிகள் இந்த ஹெவனை ரசிப்பார்கள்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

NNR
2026-09-21 22:37:09

எந்த ஒரு விமர்சனமும் எழாத அளவிற்கு விமர்சன குழுவினர் சில படங்களை இயக்கி இயக்குனர்களுக்கு புத்தியை புகட்டலாம்.