உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துரந்தர் படத்தை மீண்டும் பார்க்க விரும்பும் ஆயுஷ்மான் குரானா

துரந்தர் படத்தை மீண்டும் பார்க்க விரும்பும் ஆயுஷ்மான் குரானா

ஹிந்தியில் சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, நடிகை ஷர்வரி ஆகிய இருவரும் இணைந்து நடித்து கடந்த 27ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் யே பிரேம் மோல் லியா. காதல் குடும்ப கதையில் உருவாகியுள்ள இப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம், திரையரங்குகளில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆயுஷ்மான் குரானாவும், ஷர்வரியும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சினிமா குறித்துக் கலந்துரையாடினர். அந்த உரையாடலின் போது, 2027-ஆம் ஆண்டில் திரையரங்குகளில் புதிய பார்வையுடன் மீண்டும் பார்க்க விரும்பும் திரைப்படம் எது? என்று நடிகை ஷர்வரி, ஆயுஷ்மான் குரானாவிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆயுஷ்மான், துரந்தர் படத்திற்கு மீண்டும் மீண்டும் பார்க்கும் மதிப்பு அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டு பாகங்களையும் ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தாலும், அதன் பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒத்துப்போகும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் உள்ள சிறப்பம்சங்களுக்காக என்னால் அதை மீண்டும் மீண்டும் பார்க்க முடியும். இது இதற்கு முன் இல்லாத ஒன்று என்று கூறினார்.

இதற்கிடையில், துரந்தர் குறித்த ஆயுஷ்மானின் கருத்தை ஆமோதித்த ஷர்வரி, அது ஒரு தனித்துவமான அனுபவம் என்று குறிப்பிட்டார். இயக்குநர் ஆதித்யா தரின் இந்த படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. பாகிஸ்தானில் உள்ள ரவுடிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்களின் வலையமைப்பிற்குள் ஊடுருவும் ஒரு இந்திய உளவாளியின் கதையை இது விவரிக்கிறது. துரந்தர் படம் உலகளவில் திரையரங்குகளில் சுமார் 1300 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் 1800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாகத் திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !