உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீதை கதாபாத்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சாய் பல்லவி

சீதை கதாபாத்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சாய் பல்லவி

ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வெளியாகியுள்ள ராமாயணா பாகம் 1 படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. வட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக 30 மில்லியன் டாலர் வசூலைத் தாண்டிய இப்படம், இந்தச் சாதனையைப் படைத்த முதல் மற்றும் ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் ராவணனாக நடித்த யஷிற்குப் பெரும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையிலும், ராமராக ரன்பீர் கபூரின் தோற்றம் மற்றும் நடிப்பு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையிலும், சீதையாக நடித்த சாய் பல்லவி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு நடிகை சாய் பல்லவி தற்போது இறுதியாகப் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. சீதையாக எனது நடிப்பு குறித்த விமர்சனங்கள் என்னை வந்தடைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகள் உள்ளன. அவற்றை வெறும் கருத்துகளாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். நாம் அவற்றை எதிர்கொண்டு, வலிமையடைந்து, முன்னோக்கிச் செல்லும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விமர்சனங்கள் நம்மைப் பாதிக்காமல், இந்த உலகத்தை எதிர்கொண்டு நமது பயணத்தைத் தொடர முடியும்.

வெறும் அழகு அல்லது கவர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கு விருப்பமில்லை. வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல், சவாலான கதாபாத்திரங்களை ஏற்க ஒரு நடிகர் தயாராக இருக்க வேண்டும். பத்தாண்டு காலத் திரைப்பயணத்தில், அர்த்தமுள்ள கதாபாத்திரங்களுக்காக சுமார் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நல்ல வாய்ப்புகள் வருமா என்ற நிச்சயமற்ற தன்மை இருந்ததால், அந்தக் காலகட்டம் மனரீதியாக மிகவும் சவாலானதாக இருந்தது. இருப்பினும், மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகத் தானும் அதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், படம் வெளியான பிறகு தன்னையே ஏற்றுக்கொள்ள முடியுமா. ராமாயணம் படத்தில் சீதையாக நடித்தது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், இப்படமும் இந்தக் கதாபாத்திரமும் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும்'' அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !