உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அலைஸ் ருக்மிணி' அழகான அனுபவமாக இல்லை என்றால் சினிமாவை விட்டு விலகுகிறேன் - நானி அதிரடி

'அலைஸ் ருக்மிணி' அழகான அனுபவமாக இல்லை என்றால் சினிமாவை விட்டு விலகுகிறேன் - நானி அதிரடி

நடிகர் நானி தயாரிப்பில் முரளிகாந்த் இயக்கத்தில், நிதின், ஆபியா சையத், சாய்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் 'அலைஸ் ருக்மிணி'. டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் நானி,

“அலைஸ் ருக்மிணி திரைப்படம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக இதைவிட மகிழ்ச்சியான உணர்வு இருக்க முடியாது. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பு அது எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி எப்போதும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. படம் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. இந்த அழகான திரைப்படத்தின் மூலம் உங்களுக்கு அன்பை வழங்க வருகிறோம்.

இயக்குனர் முரளிகாந்த் சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்தில் தனித்துவமான குரல் இருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் கதையைச் சொல்லும் அவர், அதன் மூலம் வலுவான உணர்வுகளை ஏற்படுத்துகிறார். கதையைக் கேட்டபோது நான் மனதில் கற்பனை செய்ததைவிட மிகவும் அழகான திரைப்படத்தைக் கொடுத்துள்ளார்

நிதினை 21 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்த போது நானே ஆச்சரியப்பட்டேன். ஒரு நடிகராக அவருக்குள் இருக்கும் திறமையை அவர் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்து பெருமையாக இருந்தது. ஒரு கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வதிலும், அதன் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் முதிர்ச்சியை இந்தப் படம் வெளிப்படுத்தும். நிதினுக்கு 'அலைஸ் ருக்மிணி' மிகச்சிறந்த கம்பேக் திரைப்படமாக அமையும்

இந்தப் படம் உங்களுக்கு அழகான அனுபவமாக இல்லை என்றால் நான் சினிமாவை விட்டே விலகுகிறேன்” என்று அதீத நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நிதின்,

“பல நாட்கள் என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. சரியான கதைகளும் திரைப்படங்களும் அமையவில்லை. ஆனால், இந்தக் கதையைக் கேட்ட பிறகு ஆகஸ்ட் 17ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. அந்த நாளிலிருந்து தூக்க மாத்திரைகள் இல்லாமலேயே நிம்மதியாகத் தூங்கினேன். இன்றுவரை என் மனமும் இதயமும் அமைதியாக இருக்கின்றன. கதைகளைக் கேட்கும் விதத்தையே இந்தப் படம் மாற்றியுள்ளது. இனி எப்படிப்பட்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் முரளி காந்த்தான் முக்கியக் காரணம், ஒரு நடிகராகத் தான் செய்த அனைத்தும் இயக்குநர் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டவை. நான் மிகவும் சிரமமான சூழலில் இருந்தபோது, நானி பாபு கடவுளைப் போல வந்து இந்தக் கதையை என் கைகளில் கொடுத்தார். கதையைக் கேட்டதிலிருந்து படப்பிடிப்பு முடியும் வரை நான் மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

2005ல் நிதின் நடித்து வெளிவந்த 'அல்லரி புல்லொடு' என்ற படத்தில் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் நானி என்பது கூடுதல் தகவல். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !